ஆற்றில் மூழ்கி 3 வாலிபர்கள் பலி; குளிக்க சென்றபோது பரிதாபம்
கடூர் அருகே ஆற்றில் மூழ்கி 3 வாலிபர்கள் பலியானார்கள். குளிக்க சென்றபோது இந்த பரிதாபம் நடந்துள்ளது.
சிக்கமகளூரு;
குளிக்க சென்றனர்
சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா பஞ்சேனஹள்ளி அருகே உள்பெட்டேஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தர்ஷன்(வயது 16), ராகேஷ்(18), கிரண்(20). நேற்றுமுன்தினம் மாலை இவர்கள் உள்பட 6 பேர் அப்பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர்.
அதன்படி 6 பேரும் ஆற்றில் குளித்து கொண்டிருந்தனர். இதில் தர்ஷன், ராகேஷ், கிரண் ஆகிய 3 பேரும் ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்று குளித்ததாக கூறப்படுகிறது.
3 பேர் சாவு
இதனால் ஒரு கட்டத்தில் 3 பேரும் நிலைதடுமாறி தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். 3 பேரையும், அவர்களது நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் ஆற்றில் மூழ்கி அடுத்தடுத்து 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுபற்றி பஞ்சேனஹள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்போில் போலீசார், தீயணைப்பு படையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு படை வீரர்கள் ஆற்றில் மூழ்கி பலியான 3 பேரின் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
நீண்ட நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு 3 பேரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து பஞ்சேனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.