ஒடிசா ரெயில் விபத்து: ரெயில்வே ஊழியர்கள் 3 பேருக்கு நீதிமன்ற காவல் - சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு உத்தரவு


ஒடிசா ரெயில் விபத்து: ரெயில்வே ஊழியர்கள் 3 பேருக்கு நீதிமன்ற காவல் - சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு உத்தரவு
x

ஒடிசா ரெயில் விபத்தில் ரெயில்வே ஊழியர்கள் 3 பேருக்கு நீதிமன்ற காவல் விதித்து சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கடந்த மாதம் 2-ந்தேதி 3 ரெயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 295 பேர் பலியாகினர். 1,200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த விபத்து குறித்து சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விபத்து தொடர்பாக ரெயில்வே மூத்த பொறியாளர் அருண் குமார் மகந்தோ, பகுதி பொறியாளர் முகமது அமீர் கான், தொழில்நுட்ப ஊழியர் பப்பு குமார் ஆகிய 3 பேரை கடந்த 7-ந்தேதி சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

அவர்கள் மீது மரணத்தை விளைவிக்கும் குற்றம் மற்றும் ஆதாரங்களை அழித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். தொடர்ந்து, அவர்களை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது. பின்னர் இந்த காவல் மேலும் 4 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் சி.பி.ஐ. காவல் முடிவடைந்ததை தொடர்ந்து, நேற்று ரெயில்வே ஊழியர்கள் 3 பேரும் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, ரெயில்வே ஊழியர்கள் 3 பேரையும் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 27-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story