அசாம் பல்கலையில் 3 மாத தொடர் ராகிங், திடுக் தகவல்... முதல்-மந்திரி எச்சரிக்கை


அசாம் பல்கலையில் 3 மாத தொடர் ராகிங், திடுக் தகவல்... முதல்-மந்திரி எச்சரிக்கை
x

அசாமில் ராகிங் கொடுமையால் விடுதியின் 2-வது மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் மற்றொரு மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.



திப்ரூகார்,


அசாமில் திப்ரூகார் பல்கலை கழகத்தில் எம்.காம் படித்து வந்த ஆனந்த் சர்மா என்ற மாணவர் கடந்த 27-ந்தேதி விடுதியின் 2-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அவரை அருகே இருந்தவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்கு பின்னர் ஆனந்தின் உடல்நிலை தேறியது. இதுபற்றி 5 பேர் மீது ஆனந்தின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

அவர்களில் நிரஞ்சன் தாக்குர் என்ற குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். இதுதவிர, 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் 21 மாணவர்களை பல்கலைக்கழக நிர்வாகம் சஸ்பெண்டு செய்து உள்ளது. இந்த சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. கடந்த செப்டம்பர் முதல் ராகிங் கொடுமை நடந்து வந்துள்ளது.

மூத்த மாணவர்களின் தொடர் ராகிங் தொல்லையால், அதுபற்றி பல்கலை கழகத்தின் உயரதிகாரிகளிடம் ஆனந்த் தகவல் தெரிவித்து உள்ளார். பல மூத்த மாணவர்களின் பெயர்களை குறிப்பிட்டு கடிதம் எழுதியுள்ளார்.

எனினும், இதனை மறைக்கும் முயற்சியில் பல்கலைக்கழக நிர்வாகம் ஈடுபட்டு உள்ளது என கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளதுடன், ராகிங்கை மறைக்கும் செயலில் அதிகாரிகள் ஈடுபட்டார்களா? என்பது பற்றி விசாரிக்கும்படி அசாம் போலீசாருக்கு உத்தரவிட்டு உள்ளார்.

ராகிங் போன்ற விசயங்களில் பூஜ்ய சகிப்பு தன்மை கொள்கையை அரசு கொண்டுள்ளது என கூறிய அவர், அதிகாரிகளின் பக்கம் தவறு இருப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை பாயும் என எச்சரித்து உள்ளார்.

இந்த சம்பவத்தில், அரசியல் அறிவியல் படிக்கும் சுப்ரோஜோதி பருவா என்ற மற்றொரு மாணவர் கைது செய்யப்பட்டு உள்ளார். நீவார் என்ற மாணவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story