லாரியில் ஏற்றிவந்த கிரைனெட் கல் ஆட்டோ மீது விழுந்து 3 பேர் பலி; புத்தாண்டு கொண்டாட சென்றபோது சோகம்


லாரியில் ஏற்றிவந்த கிரைனெட் கல் ஆட்டோ மீது விழுந்து 3 பேர் பலி; புத்தாண்டு கொண்டாட சென்றபோது சோகம்
x

லாரியில் ஏற்றி வந்த கிரைனெட் கல் சாலையில் சென்றுகொண்டிருந்த ஆட்டோ மீது விழுந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

ஐதராபாத்,

உலகம் முழுவதும் 2023 புத்தாண்டு இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாண்டு கொண்டாட்டங்கள் நேற்று இரவு முதல் கலைகட்டியுள்ளன. பல்வேறு நகரங்களில் நேற்று இரவு முதல் பொதுஇடங்கள், குடியிருப்புகளில் குவிந்த மக்கள் ஆட்டம், பாட்டத்துடன் புத்தாண்டை வரவேற்றனர்.

இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் மகபூபாபெட் மாவட்டம் முகொரிகுடிம் கிராமத்தை சேர்ந்த சிலர் புத்தாண்டை கொண்டாட அருகில் உள்ள குரவி கிராமத்திற்கு ஆட்டோவில் சென்றுள்ளனர். ஆட்டோவில் மொத்தம் 8 பேர் பயணித்தனர்.

ஆட்டோ குரவி கிராமம் நோக்கி சென்றுகொண்டிருந்தபோது சாலையில் எதிரே கிரைனெட் கற்கலை ஏற்றிக்கொண்டு லாரி வந்தது. ஆட்டோ அருகே வந்தபோது லாரியில் இருந்த கிரைனெட் கல் ஒன்று திடீரென ஆட்டோ மீது விழுந்தது.

பல டன் எடைகொண்ட கிரைனெட் கல் விழுந்ததில் ஆட்டோ அப்பளம் போல் நொருங்கியது. இதில், ஆட்டோ டிரைவர் சுமன் (வயது 35), ஸ்ரீகாந்த் (வயது 30), நவீன் (வயது 30) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். எஞ்சிய 5 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். படுகாயமடைந்தவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். புத்தாண்டு கொண்டாட சென்றபோது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story