உலக காற்று மாசுபாடு டாப் 10 பட்டியலில் 3 இந்திய நகரங்கள்
தீபாவளி பண்டிகையை அடுத்து, உலக காற்று மாசுபாடு டாப் 10 பட்டியலில் டெல்லியுடன், மும்பை மற்றும் கொல்கத்தா நகரங்களும் சேர்ந்துள்ளன.
புதுடெல்லி,
சுவிட்சர்லாந்து நாட்டை அடிப்படையாக கொண்ட ஐ.கியூ.ஏர் என்ற அமைப்பு, உலக நாடுகளில் தீபாவளி பண்டிகைக்கு பின்னர், காற்று மாசுபாடு ஏற்பட்ட டாப் 10 நகரங்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில், 3 இந்திய நகரங்கள் இடம் பிடித்து உள்ளன.
முதல் இடத்தில் டெல்லி நகரம் உள்ளது. இதனை தொடர்ந்து மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்கள் முறையே 6-வது மற்றும் 7-வது இடங்களில் உள்ளன என அந்த அமைப்பு தெரிவிக்கின்றது.
இதன்படி, புதுடெல்லியில் காற்று தர குறியீடு 362 (மிக மோசம்) ஆக உள்ளது. கொல்கத்தா நகரில் 282 (மோசம்) ஆகவும், மும்பை நகரில் 258 ஆகவும் (மோசம்) காற்று தர குறியீடு உள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் குளிர்கால தொடக்கத்தின்போது, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் காற்றின் தரம் கடுமையாக மோசமடைந்து விடுகிறது. இதனால் மக்களுக்கு, கடுமையான சுவாச கோளாறு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.