ஒரே நாள் இரவில் 3 வீடுகளில் திருட்டு
எச்.டி.கோட்டை அருகே ரூ.4½ லட்சம் மதிப்புடைய தங்க நகைகள் மற்றும் பணத்தை, அடுத்தடுத்த வீடுகளில் மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
எச்.டி.கோட்டை:-
திருட்டு
மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா மலாரா கிராமத்தை சேர்ந்தவர் சிவம்மா. இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்று உள்ளார். இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் உள்ள தங்க நகை மற்றும் ரொக்கப்பணத்தை திருடி சென்றுள்ளனர்.
வீடு திரும்பிய சிவம்மா வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ேள சென்று பார்த்த போது 6 கிராம் தங்க நகை மற்றும் ரூ.35 ஆயிரம் ரொக்கம் மாயமாகி இருந்தது. அதனை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.
அடுத்தடுத்த வீடுகளில்...
இதேபோல், அதே கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மாட்டு கொட்டகையில் மர்மநபர்கள் புகுந்து 2 செம்மறி ஆடுகளை திருடி சென்றுள்ளனர்.
மேலும் அதே கிராமத்தை சேர்ந்த நிங்கராஜு என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 10 கிராம் தங்க நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர்.
மேலும் புட்டம்மா என்பவரின் வீட்டில் இருந்த ரூ.3 லட்சம் ரொக்கத்தையும் மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர்.
வழக்குப்பதிவு
இவ்வாறு அடுத்தடுத்து உள்ள வீடுகளில் மர்மநபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.4½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது சம்பந்தமாக திருடு போன வீட்டின் உரிமையாளர்கள் எல்லோரும் எச்.டி.கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மர்மநபர்களை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாள் இரவில் 3 வீடுகளில் திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.