நாடு மாற்றத்தை விரும்புகிறது- சந்திரசேகர் ராவ் கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற கெஜ்ரிவால் பேச்சு
தெலுங்கானா மாநிலம் கம்மத்தில் ஆளும் பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் 3 மாநில முதல்-மந்திரிகள், அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.
கம்மம்,
தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகர் ராவை தலைவராக கொண்ட ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி, சமீபத்தில் பாரத ராஷ்டிர சமிதி என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. தேசிய அரசியலை குறிவைத்தும், மத்திய பா.ஜ.க. அரசை தீவிரமாக எதிர்க்கவும் சந்திரசேகர் ராவ் இந்த மாற்றத்தைச் செய்துள்ளதாக கருத்துகள் எழுந்துள்ளன. இந்த பெயர்மாற்றத்துக்கு பிறகு முதல்முறையாக தெலுங்கானாவின் கம்மத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை சந்திரசேகர் ராவ் நேற்று நடத்தினார். இதில் ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா மற்றும் தேசிய தலைவர்கள், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் சந்திரசேகர் ராவ் பேசுகையில், மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சினை போன்றவற்றுக்கு மத்திய அரசுதான் காரணம். பிரதமர் மோடி வீட்டுக்கு போவார். பாரத ராஷ்டிர சமிதி ஆதரவில் அமையும் மத்திய அரசு, எல்.ஐ.சி. முதலீட்டு விலக்கல் போன்ற நடவடிக்கைகளை நிறுத்தும். நாடு முழுவதும் விவசாயிகளுக்காக ரைத்து பந்து போன்ற நலத்திட்டங்களை செயல்படுத்தும் என்றார்.
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், 'தற்போது நாடு மாற்றத்தை விரும்புகிறது. வருகிற 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தல், மக்களுக்கு ஒரு வாய்ப்பு. பத்தாண்டு கால ஆட்சி போதும். இன்னும் எத்தனை ஆண்டுகள்தான் மக்களாகிய நீங்கள் காத்திருக்கப்போகிறீர்கள்?' என்றார்.
பினராயி விஜயன்
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் பேசும்போது, 'மதச்சார்பின்மை, ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தை காக்க ஒரு புதிய எதிர்ப்பு தேவை' என்று கூறினார். சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், 'மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சி தனது நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறது. தற்போதைய ஆட்சிக்காலத்தைக் கடந்து அது நீடிக்காது' என்றார்.
இளைஞர்கள் வேலையின்றி தவிக்கும் தற்போதைய சூழலில், நாடு வேலைவாய்ப்புகளை எதிர்பார்க்கிறது என்று பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் பேசினார்.
டி.ராஜா
இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா பேசுகையில், 'பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். கூட்டணியை எதிர்த்து நாம் போராட வேண்டும். வருகிற 2024-ம் ஆண்டு தேர்தலில் அவர்களை தோற்கடிக்க வேண்டும்' என்றார்.
இந்த பொதுக்கூட்டத்தில் பாரத ராஷ்டிர சமிதி தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர். அவர்கள் சந்திரசேகர் ராவுக்கு ஆதரவாகவும், பா.ஜ.க.வுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர்.