நாடாளுமன்றத்தில் நுழைய முயன்ற 3 பேர் கைது
டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்துக்குள் போலி ஆதார் கார்டுடன் நுழைந்த 3 பேரால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுடெல்லி,
தற்போது 18-வது நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 543 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. இந்த கூட்டணியின் புதிய எம்.பி.க்கள் கூட்டம் இன்று டெல்லியில் நடக்கிறது. இதில் தங்கள் தலைவராக (பிரதமர்) மோடியை முறைப்படி தேர்வு செய்கின்றனர்.பின்னர் கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஜனாதிபதியை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார். அதை ஏற்று ஜனாதிபதியும் அழைப்பு விடுக்கிறார்.
இதைத்தொடர்ந்து 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் புதிய பிரதமராக தொடர்ந்து 3-வது முறையாக மோடி பதவியேற்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. புதிய பிரதமர் பதவியேற்பு விழாவையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தநிலையில், கடந்த 4ம் தேதி நாடாளுமன்றத்தின் 3வது எண் நுழைவு வாயில் வழியாக போலி ஆதார் கார்டுகளை காண்பித்து உள்ளே நுழைய முயன்ற காசீம், மோனீஸ், சோயப் ஆகிய 3 பேரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். போலி ஆதார் கார்டுகளை காட்டி நாடாளுமன்றத்தில் நுழைய முயன்ற குற்றத்திற்காக அவர்களை கைது செய்து பாதுகாப்பு படையினர் விசாரித்து வருகின்றனர்.