பிரதமர் மோடியுடன் 3 மாதங்களில் 2-வது முறையாக ஆந்திர பிரதேச முதல்-மந்திரி சந்திப்பு
பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் ஆந்திர பிரதேச முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி இன்று சந்தித்து மாநில வளர்ச்சிக்கான விவகாரங்களை பற்றி பேசியுள்ளார்.
புதுடெல்லி,
ஆந்திர பிரதேச முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் இன்று நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, நிதி ஒதுக்கீடு செய்வது, பொலாவரம் நீர்த்தேக்கம் மற்றும் புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி அளிப்பது உள்ளிட்ட மாநிலத்தின் வளர்ச்சிக்கான விவகாரங்களை பற்றி பேசியுள்ளார் என நம்பப்படுகிறது.
இந்த பயணத்தில் மூத்த மத்திய மந்திரிகள் சிலரையும் அவர் சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஏப்ரலில், பிரதமர் மோடியை ஜெகன் மோகன் ரெட்டி நேரில் சந்தித்து பேசினார்.
அந்த சந்திப்பில், கடப்பா ஸ்டீல் ஆலை, பொலாவரம் அணை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பற்றியும் அவர் பேசினார். இந்த அணை திட்டத்திற்கு ரூ.55,548.87 கோடி திருத்தியமைக்கப்பட்ட திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது.
இவற்றில் ரூ.31,118 கோடி அரசுக்கு இன்னும் தேவையாக உள்ளது. அதில், ரூ.8,590 கோடி அணை கட்டுமான பணிக்கும் மற்றும் ரூ.22,598 கோடியானது, நில கையகப்படுத்துதல் மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கும் செலவிடப்படும் என ஜெகன் மோகன் ரெட்டி கூறினார். பிரதமர் மோடியை கடந்த 3 மாதங்களில் 2-வது முறையாக ஆந்திர பிரதேச முதல்-மந்திரி சந்தித்து பேசியுள்ளார்.