காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் தொடங்கியது


காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் தொடங்கியது
x
தினத்தந்தி 4 April 2024 3:14 PM IST (Updated: 4 April 2024 3:36 PM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

புதுடெல்லி,

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் விவகாரத்தை கர்நாடக அரசு தீவிரப்படுத்தி உள்ளது. அங்கு நிலவும், குறிப்பாக பெங்களூருவில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க இது ஒன்றே வழி என அரசு மட்டுமின்றி எதிர்க்கட்சிகளும் கருதுகின்றன. இதனால் அணை கட்டுமான பணிகளுக்கு அரசு ஆர்வம் காட்டி வருகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் காவிரி ஒழுங்காற்று குழுவின் கடந்த கூட்டத்தில் (மார்ச் 21 -ந் தேதி) பெங்களூரு நகர குடிநீர் தேவைக்காக காவிரியில் இருந்து கூடுதல் தண்ணீரை திறக்க அந்த மாநில அதிகாரிகள் வலியுறுத்தினார்கள். ஆனால் தமிழக அதிகாரிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே தமிழ்நாட்டுக்கு பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்காக தலா 2.8 டி.எம்.சி. வீதம் தண்ணீர் திறக்க கர்நாடக அரசை காவிரி ஒழுங்காற்று குழு கேட்டுக்கொண்டது.

இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியம் மற்றும் கர்நாடக தரப்பு அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

நடைபெற்று வரும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் பெங்களூருவின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மேகதாது அணை அவசியம் என கர்நாடகம் வலியுறுத்தும் எனவும், தற்போது நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க காவிரியில் இருந்து கூடுதல் தண்ணீரை திறந்து விட்டே ஆக வேண்டும் என்பதில் தமிழ்நாடும் உறுதியாக நிற்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story