மும்பை அருகே இர்சல்வாடி மலைக்கிராம நிலச்சரிவு துயரத்தில் இதுவரை 27 பேர் பிணமாக மீட்பு


மும்பை  அருகே இர்சல்வாடி மலைக்கிராம நிலச்சரிவு துயரத்தில் இதுவரை 27 பேர் பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 22 July 2023 10:15 PM GMT (Updated: 22 July 2023 10:15 PM GMT)

நிலச்சரிவு சம்பவத்தில் மேலும் 5 உடல்கள் மீட்கப்பட்டதால் பலியானோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்தது. உயிரிழப்பு எண்ணிக்கை 100 ஆக உயர வாய்ப்பு இருப்பதாக மந்திரி கிரிஷ் மகாஜன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

மலைக்கிராமத்தில் நிலச்சரிவு

மராட்டிய தலைநகர் மும்பையில் இருந்து சுமார் 80 கி.மீ. தொலைவில் ராய்காட் மாவட்டத்தில் உள்ள மலைக்கிராமமான இர்சல்வாடியில் பலத்த மழை காரணமாக கடந்த புதன்கிழமை இரவு 11 மணியளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த பெருந்துயரத்தில் 17 வீடுகள் மண்ணில் புதைந்தன. 40-க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்தன. நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. பொக்லைன் எந்திரம் போன்ற கனரக வாகனங்களை மலைக்கிராமத்துக்கு கொண்டு செல்ல சாலை வசதி இல்லாததாலும், பலத்த மழை நீடித்து வருவதாலும் மீட்பு பணிகள் மந்தமாக நடந்து வருகிறது.நேற்று முன்தினம் வரை நிலச்சரிவில் சிக்கி இருந்த 22 பேர் பிணமாக மீட்கப்பட்டு இருந்தனர்.

மேலும் 5 உடல்கள் மீட்பு

இந்த நிலையில் நேற்று 3-வது நாளாக பலத்த மழைக்கு இடையே மீட்பு பணிகள் நடந்தது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் இந்த பணியில் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் மண்குவியல்கள், பாறாங்கற்கள், வீட்டின் இடிபாடுகளை அகற்றி உள்ளே யாரும் இருக்கிறார்களா? என்று தேடி வருகின்றனர். இதற்காக மோப்ப நாய்களை பயன்படுத்தி வருகின்றனர். நேற்று நடந்த மீட்பு பணியில் மேலும் 5 உடல்கள் மண்குவியலுக்கு அடியில் இருந்து மீட்கப்பட்டன. அவர்களில் 3 பேர் பெண்கள் ஆவர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை பிணமாக மீட்கப்பட்டவர்களில் 6 மாத பெண் குழந்தை, 3 வயது சிறுவன் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்த சோக தகவலும் வெளிவந்துள்ளது.

மந்திரி அதிர்ச்சி தகவல்

மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் அதிகாரி ஒருவர் கூறுகையில், " இதுவரை 27 பேரை பிணமாக மீட்டுள்ளோம். மேலும் 81 பேர் மாயமாகி உள்ளனர். எனவே மீட்பு பணி தொடரும்" என்றார். இந்த நிலையில் பலி எண்ணிக்கை சுமார் 100 ஆக உயரலாம் என்று மந்திரி கிரிஷ் மகாஜன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

இதன் மூலம் மாயமானதாக கருதப்படும் இன்னும் 81 பேர் மண்ணுக்குள் புதைந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மோசமான வானிலை காரணமாக நேற்று மாலை மீட்பு பணி நிறுத்தப்பட்டது. மீண்டும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மீட்பு பணி தொடங்க உள்ளது.

இதற்கிடையே மாயமானவர்களின் கதி என்னவென்று தெரியாமல் உறவினர்கள் சோகத்தில் உறைந்து போய் உள்ளனர். உயிர் தப்பிய அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.


Next Story