ராஜ்யசபையில் முதல் வாரத்தில் 26.9% அளவுக்கே முழுமையாக நடந்த கூட்டத்தொடர்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மேலவையில் முதல் வாரத்தில் 26.9 சதவீதம் அளவுக்கே கூட்டத்தொடர் முழுமையாக நடந்துள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18ந்தேதி தொடங்கியது. இந்த தொடரை ஆக்கபூர்வமாக நடத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக எதிர்க்கட்சிகள் உள்பட அனைத்து கட்சிகளின் ஆதரவை பெறுவதற்காகஅனைத்துக்கட்சி கூட்டங்களும் நடைபெற்றன.
இந்த தொடரில் 24 மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், நடப்பு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மேலவையில், முதல் வாரத்தில் 26.9 சதவீதம் அளவுக்கே கூட்டத்தொடர் முழுமையாக நடந்துள்ளது.
வாரத்தின் முதல் மூன்று நாட்களில் மொத்தம் ஒரு மணிநேரம் 16 நிமிடங்களே அவை நடவடிக்கைகள் இருந்தன. எனினும், கடைசி இரு நாட்களில் 5 மணிநேரம் 31 நிமிடங்கள் என இதில் முன்னேற்றம் ஏற்பட்டது.
எதிர்க்கட்சிகளின் கூச்சல், குழப்பம் மற்றும் அமளியால் அவை நடவடிக்கைகளில் இடையூறு ஏற்பட்டும், அவை ஒத்தி வைக்கப்பட்டும் மொத்தம் 18 மணிநேரம் 44 நிமிடங்கள் வீணடிக்கப்பட்டு உள்ளன.
விலைவாசி மற்றும் ஜி.எஸ்.டி. உயர்வு பற்றி விவாதிக்க வேண்டும் என அவையில் உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தினர். இதனால், அவை நடவடிக்கைகளில் இடையூறு ஏற்பட்டு, அவை ஒத்தி வைக்கப்பட்டது.
விலைவாசி உயர்வு பற்றி தனியாக விவாதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என அவை தலைவர் வெங்கையா நாயுடு அவையில் கூறியுள்ளார். எனினும், அவையில் அமளி தொடர்ந்ததுடன், இடையூறும் ஏற்பட்டது. அவையில் இந்த வாரத்தில் 9 தனி நபர் மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.