திருப்பதியில் மீண்டும் 2, 5 கிராம் தங்க டாலர் விற்பனை- பக்தர்கள் உற்சாகம்
தரிசனத்திற்கு வரும் சாமானிய பக்தர்கள் 10 கிராம் எடையுள்ள தங்க சாமி டாலர்களை வாங்க முடியாமல் தவித்தனர்.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருபுறம் சாமி உருவமும், மறுபுறம் ஏழுமலையான் கோவில் தங்க கோபுரமும் பதிக்கப்பட்டு விற்பனை செய்யும் சாமி டாலர்களை வாங்கிச்சென்று வீட்டில் வைத்து வழிபட்டால் துன்பங்கள் நீங்கி, சுபிட்சம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 2,5,10 கிராம் எடையுள்ள தங்க சாமி டாலர்களும், 5, 10 கிராம் வெள்ளி டாலர்களும், 5 மற்றும் 10 கிராம் வெண்கல சாமி டாலர்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. 2 கிராம் டாலர் ரூ.10,000, 5 கிராம் டாலர் ரூ.25 ஆயிரம் மற்றும் 10 கிராம் டாலர் ரூ.50,000க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இதன் மூலம் தேவஸ்தானத்திற்கு ஒரு நாளைக்கு ரூ.10 லட்சம் வரை வருவாயாக கிடைத்தது. இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக 2 மற்றும் 5 கிராம் டாலர்கள் விற்பனை நிறுத்தப்பட்டு, 10 கிராம் எடையுள்ள சாமி டாலர்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
தரிசனத்திற்கு வரும் சாமானிய பக்தர்கள் 10 கிராம் எடையுள்ள தங்க சாமி டாலர்களை வாங்க முடியாமல் தவித்தனர். ஒரு நாளைக்கு 5 அல்லது 6 டாலர்கள் மட்டுமே விற்பனையானது.
இதுகுறித்து பக்தர்கள் திருப்பதி தேவஸ்தானத்தில் புகார் அளித்தனர். பக்தர்களின் புகார்களை பரிசீலனை செய்த தேவஸ்தான அதிகாரிகள் மீண்டும் 2, 5 கிராம் தங்க சாமி டாலர்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். இதனால் பக்தர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.