அசாமில் அழிந்து வரும் நிலையிலுள்ள 24 கழுகுகள் மர்ம மரணம்
அசாமில் அழிந்து வரும் நிலையிலுள்ள 24 கழுகுகள் மர்ம மரணம் அடைந்து கிடந்துள்ளன. 8 கழுகுகள் மீட்கப்பட்டன.
சிவசாகர்,
இந்தியாவில் வட பகுதிகளில் வாழ்ந்து வரும் கழுகுகள் அழிந்து வரும் நிலையில் வகைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில், அசாமில் சிவசாகர் மாவட்டத்தில் கார்குச் நாவ்ஜான் நகரில் வயல்வெளி பகுதியில் சில கழுகுகள் உயிரிழந்து கிடக்கின்றன என அந்த வழியே சென்றவர்கள் பார்த்து வன துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து உள்ளனர்.
இதனை தொடர்ந்து, அதிகாரிகள் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்றனர். இதில், வயல்வெளி அருகே 24 கழுகுகள் உயிரிழந்து கிடந்தன. அதன் அருகே 8 கழுகுகள் கிடந்து உள்ளன. அவற்றை அதிகாரிகள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி வன துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்ட விசாரணையில், கழுகுகள் நஞ்சான உணவை சாப்பிட்டிருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. அந்த பகுதியில் கால்நடை ஒன்றின் உயிரற்ற உடலும் கிடந்தது.
இதனால், அந்த கால்நடையில் விஷம் கலந்து, கழுகுகளுக்கு உணவாக வைத்திருக்க கூடும் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதிக அளவில் கழுகுகள் மர்ம மரணம் அடைந்து இருப்பதற்கான காரணம் பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.