4-வது நாளாக காவிரியில் வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு
தமிழகத்திற்கு தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால் கபினி அணையின் நீர்மட்டம் 5.5 அடி குறைந்துள்ளது.
மைசூரு:-
கபினி அணை
மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமம் அருகே கபிலா ஆற்றின் குறுக்கே கபினி அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட கொள்ளளவு கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி ஆகும். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கபினி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான கேரள மாநிலத்திற்கு உட்பட்ட வயநாட்டில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் கபிலா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
மேலும் அந்த அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணை நிரம்பியதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கபினி அணையில் இருந்தும், மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமம் அருகே உள்ள கே.ஆர்.எஸ்.(கிருஷ்ணராஜசாகர்) அணையில் இருந்தும் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
குறைந்துவிட்டது
அதன்படி கபினி அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடிக்கு குறையாமல் கடந்த சில நாட்களாக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன்காரணமாக கபினி அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 5.5 அடி குறைந்து இருந்தது. அதன்படி நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 2,278.5 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,764 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 7,325 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதுபற்றி நீர்ப்பாசன துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஒவ்வொரு ஆண்டும் அணை நிரம்பியதும், முதல்-மந்திரியாக இருப்பவர் நேரில் வந்து அணைக்கு பாகினா பூஜை செலுத்துவார். ஆனால் இந்த ஆண்டு கபினி அணை நிரம்பியும் முதல்-மந்திரி சித்தராமையா அணைக்கு வந்து பாகினா பூஜை செலுத்தவில்லை. மேலும் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையும் குறைந்துவிட்டது' என்றார்.
4-வது நாளாக...
இதேபோல், 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் நேற்று காலை நிலவரப்படி 107.66 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2,349 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 15,576 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 22,901 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் அகண்ட காவிரியாக தமிழகம் நோக்கி செல்கிறது. நேற்று முன்தினம் வினாடிக்கு 22,936 கனஅடி தண்ணீர் சென்றது. 4-வது நாளாக தொடர்ந்து காவிரியில் வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடிக்கு அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.