திருமணம் ஆகாதபோதும், பெற்றோரிடம் இருந்து திருமண செலவுகளை மகள் உரிமை கோர முடியும்; ஐகோர்ட்டு உத்தரவு


திருமணம் ஆகாதபோதும், பெற்றோரிடம் இருந்து திருமண செலவுகளை மகள் உரிமை கோர முடியும்; ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 31 March 2022 5:33 PM IST (Updated: 31 March 2022 5:33 PM IST)
t-max-icont-min-icon

திருமணம் ஆகாதபோதும், பெற்றோரிடம் இருந்து திருமண செலவுகளை கேட்டு மகள் உரிமை கோர முடியும் என சத்தீஷ்கார் ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.





ராய்ப்பூர்,


சத்தீஷ்காரின் துர்க் மாவட்டத்தில் வசித்து வருபவர் ராஜேஷ்வரி (வயது 35).  சத்தீஷ்காரின் பிலாஸ்பூரில் உள்ள ஐகோர்ட் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதனை கவுதம் பாதுரி மற்றும் சஞ்ஜய் அகர்வால் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரணைக்கு எடுத்து கொண்டது.  அந்த மனுவில், இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்பு சட்டம், 1956 சட்ட பிரிவின்படி, திருமணம் ஆகாத மகள் தன்னுடைய பெற்றோரிடம் இருந்து திருமண செலவுகளை பெற அனுமதிக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு முன் குடும்ப நீதிமன்றத்தில் இதே வழக்கு கடந்த 2016ம் ஆண்டு விசாரணைக்கு வந்தது.  அந்த மனுவில் ராஜேஷ்வரி, தனது தந்தை பூனுராம், பிலாய் ஸ்டீல் ஆலையில் பணியாற்றி ஓய்வு பெற உள்ளார்.  அவருக்கு ஓய்வு கால பணி பலன்களாக ரூ.55 லட்சம் கிடைக்கும்.

அதனால், அந்த ஆலையின் உரிமையாளர், தந்தையின் ஓய்வு கால பணி பலன்களின் ஒரு பகுதியான ரூ.20 லட்சம் தொகையை தனக்கு வழங்கி விடுவிக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார்.  எனினும், விசாரணையின்போது, கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி 7ந்தேதி ராஜேஷ்வரியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.  தன்னுடைய திருமண செலவு தொகையை பெற்றோரிடம் இருந்து மகள் பெறுவதற்காக, அந்த சட்டத்தில் பிரிவுகள் எதுவும் இல்லை என்று தெரிவித்து இருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்தே, ஐகோர்ட்டில் ராஜேஷ்வரி மனு செய்துள்ளார்.  இந்நிலையில், குடும்ப நீதிமன்றத்தின் உத்தரவை ஐகோர்ட்டு ஒத்தி வைத்துள்ளது.  இந்த வழக்கை குடும்ப நீதிமன்றம் மீண்டும் மறுபரிசீலனை செய்ய உத்தரவிட்டது.  1956 சட்டத்தின் பிரிவு 3(பி) (ii) ஆகியவற்றின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டு உள்ளது.  குடும்ப நீதிமன்றத்தின் முன் தொடர்புடைய வாதிகள் வந்து ஆஜராகும்படியும் உத்தரவிட்டு உள்ளது.

இதன்படி, ஒரு பெண் திருமணம் ஆகாதபோதும், பெற்றோரிடம் இருந்து தனக்கான திருமண செலவுகளை இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்பு சட்டம், 1956 பிரிவுகளின் கீழ் உரிமை கோர முடியும் என சத்தீஷ்கார் ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

இந்த முடிவு முக்கியத்துவம் வாய்ந்தது என ஐகோர்ட்டு அமர்வு பரிசீலித்து உள்ளது.  இந்த வழக்கானது அனைத்து சட்ட புத்தகங்களிலும் இடம் பெறும் என்றும் ராஜேஷ்வரியின் வழக்கறிஞர் திவாரி கூறியுள்ளார்.


Next Story