சிங்கப்பூர் பிரதமர் சர்ச்சை பேச்சு: தூதரை அழைத்து மத்திய அரசு கண்டனம்


சிங்கப்பூர் பிரதமர் சர்ச்சை பேச்சு: தூதரை அழைத்து மத்திய அரசு கண்டனம்
x
தினத்தந்தி 18 Feb 2022 11:47 AM IST (Updated: 18 Feb 2022 11:47 AM IST)
t-max-icont-min-icon

'நேருவின் இந்தியாவில் கிரிமினல் பின்னணி கொண்ட எம்.பி.க்கள் உள்ளனர்': சிங்கப்பூர் பிரதமர் கருத்தால் சர்ச்சை

புதுடெல்லி

நேருவின் இந்தியாவில் கிரிமினல் பின்னணி கொண்ட எம்.பி.க்கள் உள்ளனர் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் நேற்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். ஜனநாயகம் எப்படி செயல்பட வேண்டும் என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார்.

அவர் பேசியதாவது:

பல நாடுகள் மிக உயர்ந்த கொள்கைகள், மதிப்பீடுகளின் அடிப்படையில் தான் தொடங்கப்பட்டன. ஆனால் நாளடைவில் அரசியலின் தன்மை மாறிவிடுகிறது. இப்போதுள்ள பல அரசியலமைப்புகள் அதனை தோற்றுவித்தவர்கள் கொள்கைக்கு சம்பந்தமே இல்லாமல் அடையாளம் இழந்து நிற்கின்றன.

சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்கள் துணிச்சல்மிகு தனித்துவம் மிக்கவர்களாக இருந்தனர். அவர்களின் பண்பாடும், தன்னிகரற்ற திறமையும் அந்த நாடுகளை வளர்த்தன. நெருப்புபோல் தம் முன் நின்ற சோதனைகளைக் கடந்து மக்கள் கொண்டாடும் தலைவர்களாக தேசத் தலைவர்களாக உருவாகினர். இஸ்ரேலின் டேவிட் பென் குரியோன்ஸ், இந்தியாவின் ஜவஹர்லால் நேரு, நமது பிரதமர் லீ குவான் ஆகியோரைக் கூறலாம். அவர்கள் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப உயர்ந்து நின்று புதிய உலகைக் கட்டமைத்தனர். தம் மக்களுக்கு புதிய எதிர்காலத்தை வகுத்தனர். ஆனால், ஆரம்ப நாட்களில் அந்தத் தலைவர்கள் முன்னெடுத்த சீரிய பணிகள் அத்துடன் நின்றுவிட்டன் அதன்பின்னர் வந்தவர்கள் அதே வேகத்துடனும் துடிப்புடனும் செயல்படவில்லை.

ஆனால், நேருவின் இந்தியாவில் இன்று பாதிக்கும் மேற்பட்ட மக்களவை எம்.பி.க்கள் மீது கிரிமினல் புகார்கள் இருப்பதாக ஊடகக் குறிப்பு கூறுகின்றது. பாலியல் பலாத்காரம், கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் பல புகார்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஜோடிக்கப்பட்டவை என்ற தகவலும் இருக்கிறது.
பென் குரியோன்ஸ் உருவாக்கிய இஸ்ரேல் இன்று அரசியல் ஸ்திரத்தன்மையின்றி உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் 4 முறை ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

இவ்வாறு அவர் பேசியிருந்தார்.

அவரது இந்தக் கருத்துக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்ததுடன் இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதர் சைமன் வாங்கை வியாழக்கிழமை அழைத்து கண்டனத்தை பதிவு செய்தது. 

இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், "சிங்கப்பூர் பிரதமரின் கருத்து தேவையற்றது. இந்த விவகாரத்தை அந்நாட்டின் கவனத்துக்கு கொண்டு சென்றோம்' என கூறினார்.

Next Story