216 அடி உயரத்தில் பிரமாண்டமான ராமானுஜர் சிலை
ஐதராபாத்தில் நிறுவப்பட்டுள்ள பிரமாண்டமான ராமானுஜர் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.
ஐதராபாத்,
வைணவ ஆச்சாரியார் ராமானுஜர் அவதரித்து 1,000 ஆண்டுகள் நிறைவுற்றதை கொண்டாடும் வகையில், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை அடுத்துள்ள முச்சிந்தல் பகுதியில் உள்ள சின்ன ஜீயர் ஆசிரமத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் மிக பிரமாண்டமாக பத்ம பீடத்தின் மீது 216 அடி உயரத்தில் ராமானுஜருக்கு பஞ்சலோக சிலை அமைக்கப்பட்டுள்ளது.
‘சமத்துவ சிலை’ என்றழைக்கப்படும் இந்த சிலை இன்று(சனிக்கிழமை) திறக்கப்பட உள்ளது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிலையை திறந்து வைக்கிறார். இதனை முன்னிட்டு ஐதராபாத்தில் இருந்து இந்த ஆசிரமத்திற்கு வரும் அனைத்து தடங்களும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ராமானுஜரின் சிலை இரவில் மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது.
ரூ.1,000 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆசிரமத்திற்கு தற்போது தெலுங்கானா, ஆந்திரா, தமிழகம், கர்நாடகம், கேரளா, மராட்டியம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து வேத பண்டிதர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதுதவிர அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் இருந்தும் இங்கு தொண்டு செய்ய வந்துள்ளனர்.
இங்கு இன்று பிரதமர் நரேந்திர மோடியும், 7-ந் தேதி பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங்கும், 8-ந் தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும், 13-ந் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் வருகை தர உள்ளனர். மேலும், இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு மாநில கவர்னர்கள், முதல்-மந்திரிகள், எம்.பி.க்கள், மந்திரிகள் ராமானுஜரின் சமத்துவ சிலையை காண வருகை தர உள்ளனர்.
எனவே 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர, ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு படை வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவ முகாமும் அமைக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story