புனித் ராஜ்குமார் மறைவு: கன்னட திரையுலகிற்கு மிகப்பெரும் இழப்பு - நடிகர் சிரஞ்சீவி
நடிகர் புனித் ராஜ்குமார் உடலுக்கு ரசிகர்கள், திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பெங்களூரு,
கன்னட திரை உலகின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் (வயது46) நேற்று முன்தினம் பெங்களூருவில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அங்குள்ள கன்டீரவா மைதானத்தில் அவரது உடல் பொதுமக்கள், ரசிகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் மந்திரிகள் அஞ்சலி செலுத்தினர்.
மேலும் மாநிலம் முழுவதும் இருந்து வந்த ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் புனித் ராஜ்குமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தமிழ் நடிகர்கள் சரத்குமார், அர்ஜூன், பிரபுதேவா உள்ளிட்டோர் வந்து அஞ்சலி செலுத்தினர். புனித் ராஜ்குமாரின் உடல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் புனித் ராஜ்குமார் உடலுக்கு தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, ஜூனியர் என்.டி.ஆர், பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், ராணா டகுபதி உள்ளிட்ட தெலுங்கு நடிகர்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சிரஞ்சீவி, “கன்னட திரையுலகிற்கு பெரும் இழப்பு... கர்நாடகாவின் பவர் ஸ்டாரான நமது அப்புவை இழந்தது. அவர் எங்கள் குடும்பத்துடன் மிகவும் நெருக்கமாக இருந்தார்... அவருடன் பல நினைவுகள், அவரது தந்தை ராஜ்குமார் காலத்தில் இருந்தே தொடர்ந்து வருகிறது” என்று அவர் கூறினார்.
Related Tags :
Next Story