தொலைபேசி ஒட்டுக்கேட்பு புகார்: நாடாளுமன்றத்தில் அமித்ஷா விளக்கம் அளிக்க வேண்டும் -சுப்ரமணியன் சுவாமி


தொலைபேசி ஒட்டுக்கேட்பு புகார்:  நாடாளுமன்றத்தில் அமித்ஷா விளக்கம் அளிக்க வேண்டும் -சுப்ரமணியன் சுவாமி
x
தினத்தந்தி 19 July 2021 10:54 AM IST (Updated: 19 July 2021 10:54 AM IST)
t-max-icont-min-icon

தொலைபேசி ஒட்டுக்கேட்பு புகார் குறித்து நாடாளுமன்றத்தில் அமித்ஷா விளக்கம் அளிக்க வேண்டும் என பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறி உள்ளார்.


புதுடெல்லி

கடந்த 2019 ஆம் ஆண்டில் வாட்ஸ் ஆப்பின் தகவல்கள் இஸ்ரேலின் என்.எஸ். ஓ என்ற நிறுவன  பெகாசஸ் என்ற உளவு செயலி மூலமாக  ஒட்டுகேட்கப்பட்ட சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில், உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தொலைபேசி உரையாடல்கள் உளவு பார்க்கப்பட்டதாக பாரிஸை சேர்ந்த பார்பிடன் என்ற ஊடக நிறுவனத்துடன் இணைந்து  ஊடகங்கள்  சர்வதேச அளவில் கூட்டாக விசாரணை மேற்கொண்டன.

இந்த விசாரணையில்  அதிர்ச்சியூட்டும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனத்திடம் வேவு பார்ப்ப்தற்காக 50 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட செல்போன் எண்கள் இருந்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை இந்தியா, ஐக்கிய அரபு  அமீரகம், சவுதி அரேபியா, மெக்சிகோ, ஹங்கேரி பஹ்ரைன் உள்ளிட்ட 10 நாடுகளை சேர்ந்தவை என்று கூறப்படுகிறது. 

குறிப்பாக இந்தியாவை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோரது செல்போன் எண்களும் பட்டியலில் உள்ளன இதில் 2 அமைச்சர்கள் 3 எதிர்க்கட்சி தலைவர்கள் 40-க்கும் அதிகமான பத்திரிகையாளர்கள், நீதிபதி ஆகியோரின் எண்களும் அடக்கம். சமூக ஆர்வலர்கள் எண்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன என்று அதன் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அதே நேரத்தில் இந்த எண்கள் வேவு பார்க்கப்பட்டவையா என்பதை உறுதி படுத்த ஆய்வு தொடர்வதாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. சட்ட விரோத செயல்களை தடுக்கும் நோக்கிலேயே சாப்ட்வேர் விற்பனை என இஸ்ரேல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இந்த விசாரணை அறிக்கை அடிப்படை ஆதாரமற்றது என்று மத்திய அரசு நிராகரித்துள்ளது.இந்தியா உறுதியான ஜனநாயக நாடு என்றும் அனைத்து குடிமக்களின் தனிநபர் உரிமைகள் பாதுகாக்கப்படுவதில் அரசு உறுதியாக இருப்பதாகவும் மத்திய அரசு தரப்பில் கூறப்ப்ட்டு உள்ளது.

இதே போன்று பெகாசஸ் செயலியை இந்தியாவுக்கு விற்பனை செய்த நிறுவனமும் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டதற்கான புகார்களை மறுத்துள்ளது. தவறான புகார்களைத் தெரிவிப்போர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்போவதாக பெகாசஸ் செயலியை சந்தைப்படுத்தும் இஸ்ரேலின் என்.எஸ். ஓ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில்  தொலைபேசி ஒட்டுக்கேட்பு புகார் குறித்து நாடாளுமன்றத்தில் அமித்ஷா விளக்கம் அளிக்க வேண்டும் என பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி டுவிட் செய்து உள்ளார்.

இது குறித்து சுப்ரமணியன் சுவாமி கூறியதாவது:-

இஸ்ரேல் நிறுவனத்துடன் மோடி அரசுக்கு தொடர்பா..? இல்லையா..? என்பது பற்றி கூற வேண்டும். ஒட்டு கேட்பு குறித்து உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் விளக்கினால் நல்லது. இல்லாவிடில் அமெரிக்கா வாட்டர் கேட் ஊழல் போல் தலைவலிதான் என கூறி உள்ளார்.


Next Story