பல்வேறு வெளிநாடுகளில் இருந்து இந்திய கடற்படை கப்பல்களில் மருத்துவ தளவாடங்கள் வருகை
இந்திய கடற்படை கப்பல்கள் மூலம் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து மருத்துவ தளவாடங்கள் மற்றும் மருந்து பொருட்கள் இந்தியா கொண்டு வரப்பட்டு உள்ளன.
புதுடெல்லி,
கொரோனாவின் 2-வது அலையால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க பல்வேறு உலக நாடுகள் உதவி வருகின்றன. மருந்து பொருட்கள், ஆக்சிஜன் உற்பத்தி அலகுகள், தடுப்பூசிகள் போன்ற அத்தியாவசிய மருத்துவ தளவாடங்களை அதிக அளவில் அளித்து வருகின்றன.
உலக நாடுகளின் இந்த உதவிகளை பெற்று வருவதில் இந்திய விமானப்படை விமானங்கள் முன்னணியில் செயல்பட்டு வருகின்றன. அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ தளவாடங்களை விமானப்படை விமானங்கள் தொடர்ந்து கொண்டு வந்து கொண்டிருக்கின்றன.
இதைப்போல கடற்படையும் வெளிநாட்டு உதவிகளை பெற்று வருவதற்கு பல்வேறு போர்க்கப்பல்களை பயன்படுத்தி வருகிறது.
இதில் வளைகுடா நாடுகள் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து ஆக்சிஜன் மற்றும் மருந்து பொருட்களை 9 கப்பல்கள் கடந்த வாரம் இந்தியா கொண்டு வந்து சேர்த்தன.
இதன் தொடர்ச்சியாக 3 போர்க்கப்பல்கள் மூலம் ஏராளமான மருத்துவ தளவாடங்கள் நேற்று வெவ்வேறு துறைமுகங்களை வந்து சேர்ந்துள்ளன.
அந்தவகையில் 80 டன் ஆக்சிஜன், 20 கிரையோஜனிக் ஆக்சிஜன் டேங்குகள், 3,150 சிலிண்டர்கள், 10 ஆயிரம் பரிசோதனை கருவிகள், 54 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 450 கவச உடைகள் போன்றவற்றை ஏராளமான மருந்து பொருட்கள் இந்த கப்பல்களில் கொண்டு வரப்பட்டு உள்ளன.
இதில் கடற்படையின் ஐராவத் கப்பல் மூலம் சிங்கப்பூரில் இருந்து 8 கிரையோஜனிக் ஆக்சிஜன் டேங்குகள் மற்றும் பிற பொருட்கள் விசாகப்பட்டினம் துறைமுகத்தை வந்தடைந்தன.
மற்றொரு போர்க்கப்பலான ஐ.என்.எஸ். கொல்கத்தா, குவைத் மற்றும் கத்தாரில் இருந்து 40 டன் ஆக்சிஜன், 400 சிலிண்டர்கள், 47 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் ஏராளமான பொருட்களை மங்களூர் துறைமுகத்துக்கு கொண்டு வந்து சேர்த்தது.
இதைப்போல கத்தாரில் இருந்து 40 டன் ஆக்சிஜன் உள்ளிட்ட பொருட்களை ஏற்றிக்கொண்டு ஐ.என்.ஸ். திரிகந்த் போர்க்கப்பல் மும்பை துறைமுகத்தை அடைந்துள்ளது.
இந்த தகவல்களை இந்திய கடற்படை செய்தி தொடர்பாளர் கமாண்டர் விவேக் மத்வால் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story