தமிழ்நாடு, புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார பார்வையாளர்கள் நியமனம்
தமிழ்நாடு, புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார பார்வையாளர்களை கட்சித்தலைவர் சோனியா காந்தி நியமித்து உள்ளார்.
புதுடெல்லி,
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கு இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களுக்குள் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்காக தேசிய மற்றும் மாநில கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன.
அந்தவகையில் காங்கிரஸ் கட்சியும் இந்த மாநிலங்களில் வெற்றிபெறும் முனைப்போடு பணிகளை தொடங்கி விட்டது.
குறிப்பாக பிற கட்சிகளுடன் கூட்டணி பேச்சு, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் இறங்கி உள்ளது.
அத்துடன் இந்த மாநிலங்களுக்கு தேர்தல் பிரசார பார்வையாளர்களையும் நேற்று அறிவித்து உள்ளது. இந்தபணிகளில் பல்வேறு மூத்த தலைவர்களை நியமித்து கட்சித் தலைவர் சோனியா அறிவித்து உள்ளார்.
இதில் தமிழ்நாடு, புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கு, கட்சியின் தேர்தல் பிரசார பார்வையாளர்களாக கட்சியின் மூத்த தலைவர்களும், முன்னாள் மத்திய மந்திரிகளுமான வீரப்ப மொய்லி, பல்லம் ராஜு, மராட்டிய மந்திரி நிதின் ராவத் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
கேரளாவுக்கு ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், கோவாவின் முன்னாள் முதல்-மந்திரி லைசினோ பலேரோ, கர்நாடகா முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
சத்தீஸ்கார் முதல்-மந்திரி பூபேஷ் பாகேல், கட்சியின் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் மற்றும் மூத்த தலைவர் சகீல் அகமது கான் ஆகியோர் அசாமுக்கு தேர்தல் பிரசார பார்வையாளர்களாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றனர்.
மேற்கு வங்காள தேர்தல் பிரசார பார்வையாளர்களாக மூத்த தலைவர்கள் ஹரிபிரசாத், அலாம்கிர் ஆலம், பஞ்சாப் மந்திரி விஜய் இந்தர் சிங்லா ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நியமனங்கள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வந்திருப்பதாக கட்சி தலைமை கூறியுள்ளது. இந்த பார்வையாளர்கள் கட்சியின் பொதுச்செயலாளர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்களுடன் இணைந்து தங்கள் கடமையை உடனடியாக தொடங்குகின்றனர்.
Related Tags :
Next Story