கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மகள் திருமணம் - திருவனந்தபுரத்தில் எளிமையாக நடந்தது


கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மகள் திருமணம் - திருவனந்தபுரத்தில் எளிமையாக நடந்தது
x
தினத்தந்தி 16 Jun 2020 3:45 AM IST (Updated: 16 Jun 2020 2:04 AM IST)
t-max-icont-min-icon

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மகள் திருமணம் திருவனந்தபுரத்தில் எளிமையாக நடந்தது.

திருவனந்தபுரம்,

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன்-கமலா தம்பதி மகள் வீனா. இவருக்கும், அப்துல்காதர்-ஆயிஷா பீவி தம்பதி மகன் முகமது ரியாசுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. வீனா, பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். மணமகன் முகமது ரியாஸ், ஜனநாயக வாலிபர் சங்க அகில இந்திய தலைவராக உள்ளார்.

நிச்சயிக்கப்பட்ட வீனா-முகமது ரியாசுக்கு திருமணம் திருவனந்தபுரத்தில் உள்ள முதல்-மந்திரியின் அரசு இல்லத்தில் நேற்று எளிமையாக நடந்தது. கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால், அந்த விதிகளுக்கு உட்பட்டு குறைந்த அளவிலான நபர்கள் மட்டுமே விழாவில் பங்கேற்றனர். இருவீட்டாரின் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த மந்திரிகளில் தொழில்துறையை கவனித்து வரும் ஜெயராஜன் ஒருவர் மட்டுமே பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

வீனா, முகமது ரியாஸ் இருவருக்கும் இது 2-வது திருமணமாகும். வீனா ஏற்கனவே திருமணமாகி 2015-ம் ஆண்டு விவாகரத்தானவர். அதேபோல், முகமது ரியாஸ் 2017-ம் ஆண்டு விவாகரத்து பெற்றவர். முகமது ரியாஸின் தந்தை அப்துல் காதர் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார்.

கடந்த 2009-ம் ஆண்டு கோழிக்கோடு நாடாளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் முகமது ரியாஸ் வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது, தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராகவனிடம் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். முதல்-மந்திரி பினராயி விஜயன் மகள் வீனா-முகமது ரியாசுக்கு வாழ்த்து தெரிவித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசிதரூர் எம்.பி. மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Next Story