டெல்லி வன்முறை: இதுவரை சுமார் 630 பேர் கைது - டெல்லி காவல்துறை
டெல்லி வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இதுவரை சுமார் 630 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகீன்பாக்கில் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வரும் நிலையில், வடகிழக்கு டெல்லியின் ஜாப்ராபாத், மாஜ்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சமீபத்தில் புதிதாக போராட்டங்கள் தொடங்கின. இந்த போராட்டத்துக்கு எதிராக மற்றொரு பிரிவினரும் கடந்த 23-ந்தேதி போராட்டம் நடத்த முயன்றனர்.
இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். அப்போது போலீசார் தலையிட்டு கண்ணீர் புகை குண்டுகளை வீசி மோதலை கட்டுப்படுத்தினர். ஆனால் இந்த மோதல் மறுநாளில் மிகப்பெரும் வன்முறையாக வெடித்தது. ஜாப்ராபாத், மாஜ்பூர், சந்த்பாக், குரேஜிகாஸ், பஜன்புரா, யமுனா விகார் என வடகிழக்கு டெல்லி முழுவதும் வன்முறை பரவியது.
சில இடங்களில் துப்பாக்கிச்சூடும் நடந்தது. இதில் ஏராளமானோர் படுகாயமடைந்தனர். தலைமை காவலர் மற்றும் உளவு பிரிவு அதிகாரி உள்பட பல உயிரிழப்புகளும் நிகழ்ந்தன. இதையடுத்து வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர துணை ராணுவம் வரவழைக்கப்பட்டது. மேலும் வன்முறை பாதித்த பகுதிகளில் ‘144’தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
டெல்லி வன்முறை சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கலவரத்தை உரிய நேரத்தில் கட்டுப்படுத்த மத்திய அரசு தவறி விட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இந்தநிலையில் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் கலவரம் பாதித்த மெளஞ்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அவர் சேதம் குறித்து விசாரித்தார். பாதிக்கப்பட்ட மக்கள் அவரை சூழ்ந்து கொண்டு தங்கள் நிலைமையை எடுத்துரைத்தனர். மேலும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் டெல்லி காவல்துறையின் மக்கள் தொடர்பு அலுவலர் எம்.எஸ். ரந்தாவா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
வடகிழக்கு டெல்லி வன்முறை சம்பவங்கள் தொடர்பாக, இதுவரை 148 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டு, சுமார் 630 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு தொடர்பாக 25 பேர் மீது தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story