திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா, கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்


திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா, கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 29 Sep 2019 8:11 PM GMT (Updated: 29 Sep 2019 8:11 PM GMT)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்று (திங்கட்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் தொடங்கி 9 நாட்கள் நடக்கிறது. 4-ந் தேதி கருடசேவை நடைபெறுகிறது.

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று (திங்கட்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது. அதையொட்டி நேற்று மாலை அங்குரார்ப்பணம் நடந்தது. அதைத்தொடர்ந்து இன்று மாலை 5.23 மணியில் இருந்து 6 மணிவரை மீன லக்னத்தில் கொடியேற்றம் நடக்கிறது. இன்று இரவு பெரிய சேஷ வாகன வீதிஉலா நடக்கிறது.

நாளை (அக்டோபர்) 1-ந்தேதி காலை சிறிய சேஷ வாகன வீதிஉலா, இரவு அம்ச வாகன வீதிஉலா. 2-ந்தேதி காலை சிம்ம வாகன வீதிஉலா, இரவு முத்துப்பந்தல் வாகன வீதிஉலா, 3-ந்தேதி காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு சர்வ பூபால வாகன வீதிஉலா, 4-ந்தேதி மோகினி அவதாரத்தில் பல்லக்கு வாகன வீதிஉலா, இரவு 7 மணியில் இருந்து இரவு 12 மணிவரை கருட வாகன வீதிஉலா.

5-ந்தேதி காலை அனுமந்த வாகன வீதிஉலா, மாலை தங்கத்தேரோட்டம், இரவு யானை வாகன வீதிஉலா, 6-ந்தேதி காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா, 7-ந்தேதி காலை தேரோட்டம், இரவு குதிரை வாகன வீதிஉலா, 8-ந்தேதி காலை சக்கர ஸ்நானம், இரவு கொடியிறக்கம் நடக்கிறது.

வாகன வீதிஉலா தினமும் காலை 9 மணியில் இருந்து பகல் 11 மணிவரையிலும், இரவு 8 மணியில் இருந்து இரவு 10 மணிவரையிலும் நடக்கிறது. மேற்கண்ட வாகனங்களில் உற்சவர் மலையப்பசாமி தனித்தும், உபய நாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவியுடனும் சிறப்பு அலங்காரத்திலும், பிரத்யேக அவதாரத்திலும் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

Next Story