இந்திய தயாரிப்புகளுக்கு பட்ஜெட்டால் ஊக்கம் கிடைக்கும் - நிதி மசோதா மீதான விவாதத்தில் நிர்மலா சீதாராமன் பேச்சு


இந்திய தயாரிப்புகளுக்கு பட்ஜெட்டால் ஊக்கம் கிடைக்கும் - நிதி மசோதா மீதான விவாதத்தில் நிர்மலா சீதாராமன் பேச்சு
x
தினத்தந்தி 19 July 2019 5:00 AM IST (Updated: 19 July 2019 3:27 AM IST)
t-max-icont-min-icon

இந்திய தயாரிப்புகளுக்கு பட்ஜெட்டால் ஊக்கம் கிடைக்கும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நிதி மசோதாவை தாக்கல் செய்தார். அப்போது எதிர்க்கட்சியினர் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான வரி உயர்வு, ரூ.1 கோடிக்கு மேல் வங்கியில் பணம் எடுத்தால் 2 சதவீத வரி, பத்திரிகை காகிதத்துக்கு சுங்கவரி உயர்வு ஆகியவைகளை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

ஆனால் இவைகளை நீக்க மறுத்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-

நிதி மசோதாவில் (பட்ஜெட்) குறிப்பிடப்பட்டுள்ள அறிவிப்புகள் குடிமக்களின் சுமையை குறைக்கவும், அவர்களது வாழ்க்கையை எளிதாக்கவும் நோக்கமாக கொண்டவையே.

இந்திய தயாரிப்புகளையும், மின்னணு பணப்பரிவர்த்தனையையும் ஊக்குவிக்கும் வகையில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. நேரடி வரிகளில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் மூலம் 99 சதவீத நிறுவனங்களுக்கு வரி குறைக்கப்பட்டு, அதன் மூலம் இந்திய தயாரிப்புகளுக்கு ஊக்கம் கிடைக்கும்.

ஒருவர் ஒரு வங்கி கணக்கில் இருந்தோ அல்லது அவர் பெயரில் உள்ள பல கணக்குகளில் இருந்தோ ரூ.1 கோடிக்கு மேல் பணம் எடுத்தால் வசூலிக்கும் 2 சதவீத வரி, அவர்கள் வரி கணக்கு தாக்கலின்போது சரிசெய்யப்படுவதால் கூடுதல் சுமை எதுவும் ஏற்படாது. வங்கிகள் தவிர வங்கி சேவை வழங்கும் கூட்டுறவு சங்கங்கள், தபால் அலுவலகம் ஆகியவையும் இதில் அடங்கும். வருகிற செப்டம்பர் 1-ந்தேதி முதல் இது அமலுக்கு வரும்.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களை ஒரு அறக்கட்டளையாக பதிவு செய்திருந்தால் புதிதாக கூடுதல் வரியை செலுத்த வேண்டும். அவர்கள் தங்கள் அறக்கட்டளையை ஒரு நிறுவனமாக பதிவு செய்துகொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நிதி மசோதாவுடன் 7 மறைமுக வரிகள் சட்டங்களிலும் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. இதில் ஜி.எஸ்.டி.யில் மட்டுமே 5 சட்டங்கள் திருத்தப்பட்டுள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கேட்டுக்கொண்டபடி ஜி.எஸ்.டி. எளிமையாக்கப்பட்டுள்ளது. 7 நேரடி வரி சட்டங்களும், செபி சட்டம் உள்பட நிதி வர்த்தகம் தொடர்பான 8 சட்டங்களும் திருத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி எம்.பி. பிரேமசந்திரன், பினாமி சட்டம், செபி சட்டம், முறைகேடான பணப்பரிவர்த்தனை சட்டம் ஆகியவைகளில் திருத்தம் செய்துள்ளதை ஏற்கக்கூடாது. இந்த நிதி மசோதாவை ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதனை ஏற்கமறுத்த சபாநாயகர் ஓம் பிர்லா, குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த நிதி மசோதாவை நிறைவேற்றினார்.


Next Story