சூட்கேசிற்கு பதில் துணியால் மூடிய பட்ஜெட் ஆவணங்கள் ஏன்? பொருளாதார ஆலோசகர் விளக்கம்
2019 ஆண்டுக்கான பட்ஜெட் ஆவணங்களை சூட்கேசிற்கு பதில் சிவப்பு துணியால் மூடி எடுத்து வந்தது ஏன் என பொருளாதார ஆலோசகர் விளக்கம் அளித்துள்ளார்.
புதுடெல்லி,
2019 ஆண்டுக்கான பட்ஜெட் ஆவணங்களை சூட்கேசிற்கு பதில் சிவப்பு துணியால் மூடி எடுத்து வந்தது ஏன் என பொருளாதார ஆலோசகர் விளக்கம் அளித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி 2019-20ம் நிதி ஆண்டுக்கான முழுமையான மத்திய பட்ஜெட் இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை. இடைக்கால பட்ஜெட்டைத்தான் கடந்த பிப்ரவரி 1ந்தேதி அப்போதைய நிதி மந்திரி பியூஸ் கோயல், நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தார்.
2019-20ம் நிதி ஆண்டின் முதல் 4 மாத காலத்துக்கு, அதாவது புதிய அரசு பதவி ஏற்று, முழு பட்ஜெட் தாக்கல் செய்து நடைமுறைக்கு வரும் வரையிலான காலத்துக்கு மத்திய அரசு ஊழியர்கள் சம்பளம், நடைமுறையில் இருந்து வருகிற திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு அந்த இடைக்கால பட்ஜெட் உதவியது.
சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்று, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த மே மாதம் 30ந்தேதி பதவி ஏற்றது. நிதி மந்திரியாக தமிழ்நாட்டை சேர்ந்த நிர்மலா சீதாராமன் பதவி ஏற்றார்.
பதவி ஏற்றவுடன் அவர் 2019-20ம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபட்டார். பட்ஜெட்டுக்கு முந்தைய நிகழ்வாக பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்ற மக்களவையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். அதில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இன்று மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற மக்களவையில் காலை 11 மணிக்கு தாக்கல் செய்து பேசுகிறார். இது அவரது முதல் பட்ஜெட் ஆகும். இதற்காக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், மத்திய நிதி இணை மந்திரி அனுராக் தாக்குர், நிதி செயலாளர் எஸ்.சி. கார்க், தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் மற்றும் பிற அதிகாரிகள் நிதி அமைச்சகத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இதுபற்றி பொருளாதார தலைமை ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் கூறும்பொழுது, மத்திய நிதி மந்திரி சூட்கேசிற்கு பதிலாக சிவப்பு துணியால் மூடி பட்ஜெட் ஆவணங்களை நாடாளுமன்றத்திற்கு கொண்டு செல்கிறார்.
இது இந்திய மரபிலானது. மேற்கத்திய அடிமை எண்ணத்திற்கு விடை கொடுக்கும் அடையாளத்தின் வடிவாக இந்த முறை கடைப்பிடிக்கப்படுகிறது என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உடன் நிதி மந்திரி உயரதிகாரிகளுடன் சென்று முறைப்படி சந்தித்து கூட்டம் ஒன்றை நடத்தினார்.
இந்திய நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து இந்தியாவில் ஆண்டு தோறும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வோரு முறையும் நிதி மந்திரிகள் பட்ஜெட் தாக்கல் செய்யவரும் போது ஒரு பிரீப்கேஸ் கொண்டு வருவார்கள். அப்படி அந்த பிரீப்கேசில் என்னதான் இருக்கிறது.
இதற்கு நாம் பட்ஜெட்டின் தோற்றத்தை அறிய வேண்டும். பட்ஜெட் என்ற சொல் ஆங்கில வார்த்தை 'bowgette', பிரெஞ்சின் ‘bougette’ என்ற வார்த்தையில் இருந்து வந்தது. இதற்கு தோல்பை என்று பெயர். நவீன கால பாரம்பரியங்களை போலவே, விக்டோரியா காலத்தில் வில்லியம் எவர்ட் க்ளாட்ஸ்டோன் ஒரு சிறிய சிவப்பு பெட்டியில் அவரது பட்ஜெட் ஆவணங்களை கொண்டு வந்தார்.
இந்தியாவில், 1947 நவம்பர் 26 அன்று ஆர்.கே. சண்முகம் செட்டி பட்ஜெட் ஆவணங்களை ஒரு லெதர் போர்ட்ஃபோலியோ பையில் கொண்டு வந்தபோது நமது முதல் யூனியன் பட்ஜெட்டின் இந்தியாவின் பாரம்பரியம் தொடங்கியது.
10 ஆண்டுகளுக்கு பின்னர், டிடி கிருஷ்ணமாச்சாரி வழக்கமான பட்ஜெட் பெட்டிக்கு பதிலாக ஒரு மெல்லிய கோப்புகளுடன் நாடாளுமன்றத்திற்கு வந்தார். இதன்பின்பு 1970 களில், பிரீப்கேஸ் வந்தது. தொடர்ந்து பட்ஜெட் ஆவணங்களை கொண்டு வர அது பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், இந்த முறை அதற்கு பதிலாக நிதி மந்திரி, இந்திய அரசு முத்திரையுடன் கூடிய சிவப்பு துணியால் ஆவணங்களை மூடி எடுத்து வந்துள்ளார்.
Related Tags :
Next Story