2019 நாடாளுமன்ற தேர்தலில் ரூ.60 ஆயிரம் கோடி செலவு - சிஎம்எஸ் ஆய்வு


2019 நாடாளுமன்ற தேர்தலில் ரூ.60 ஆயிரம் கோடி செலவு  - சிஎம்எஸ் ஆய்வு
x
தினத்தந்தி 4 Jun 2019 11:44 AM IST (Updated: 4 Jun 2019 11:44 AM IST)
t-max-icont-min-icon

நடந்து முடிந்த 2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக மொத்தமாக 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளதாக சிஎம்எஸ் என்ற தனியார் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி

தேர்தலில் தான் கணக்கில் வராத பணம், கணக்கில் வந்த பணம், கருப்பு பணம்,  சட்டத்திற்கு உட்பட்ட பணம், சட்டவிரோதமான பணம் என பணம் வாரி இறைக்கப்படும். 

கடந்த 2014-ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 30 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டதாக டெல்லியை சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனமான ஊடக ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

தேர்தலுக்கு உத்தேச மதிப்பீடு ரூ.7,000-8,000 கோடி மட்டுமே இருந்த போதிலும், மீதமுள்ள 27,000 கோடி ரூபாய் கணக்கில் வராத பணமாக இருப்பதாக ஆய்வு தெரிவித்து இருந்தது.

2014-ஆம் ஆண்டு தேர்தலில் 533 பெரிய பாராளுமன்ற தொகுதிகளுக்கு  வேட்பாளர் ஒருவர் ரூ.70 லட்சமும், சிறிய பாராளுமன்ற தொகுதிகளுக்கு ரூ.54 லட்சமும் செலவிடலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.

வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள வாக்குமூலத்தின் படி சராசரியாக ஒரு வேட்பாளர் ரூ.25 லட்சம் மட்டுமே செலவு செய்ததாக கூறி உள்ளார். ஆணையம் குறிப்பிட்ட தொகையை விட இது குறைவாக உள்ளது. 2014 தேர்தல்களில் வேட்பாளர்களின் செலவினம், தேர்தல் ஆணையம் நிர்ணயித்திருந்த தொகுப்பில் 58 சதவீதமாக இருந்தது.

அறிவிக்கப்பட்ட தொகையை விட 10 எம்.பி.க்கள் அதிகமாக செலவு செய்ததாக குறிப்பிட்டு உள்ளனர். பாரதீய ஜனதாவில் 4 எம்பிக்களும், திரிணாமுல் காங்கிரசில் 2 எம்பிக்களும், காங்கிரஸ், இந்திய தேசியவாத காங்கிரஸ், யூனியன் முஸ்லீம் லீக், அதிமுக ஆகிய கட்சிகளில் தலா ஒரு எம்.பி.யும் அதிகமாக செலவு செய்ததாக குறிப்பிட்டு இருந்தனர்.

நடந்து முடிந்த 2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக மொத்தமாக 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளதாக சிஎம்எஸ்  தனியார் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 7 கட்டங்களாக 17வது மக்களவைக்கான தேர்தல்கள் நடத்தப்பட்டது. ஏப்ரல் 11ம் தேதி துவங்கி மே 19ம் தேதி வரையில் 542 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்பட்டு அதன் முடிவுகள் மே மாதம் 23ந் தேதி வெளியிடப்பட்டது.

மே 30ம் தேதி மீண்டும் பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி. அவரோடு 57 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கான பொறுப்புகள் மே 31ம் தேதி ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தல் செலவுகள் குறித்த புள்ளி விவரங்களை சிஎம்எஸ் (Centre for Media Studies )  தனியார் ஆய்வு அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி சராசரியாக ஓட்டுக்கு ரூ.700 வீதம் செலவிடப்பட்டுள்ளதாகவும், ஒரு மக்களவை தொகுதிக்கு ரூ.100 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 



2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிய நிலையில் 2019ல் 60 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. உலக அளவில் இந்திய தேர்தலே அதிக செலவில் நடத்தப்பட்டுள்ளதாக சிஎம்எஸ் தெரிவித்துள்ளது.

மொத்தமாக, தேர்தலுக்காக 60 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டதாகவும் இதில் தேர்தல் ஆணையம் மட்டும் 10 முதல் 12 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவிட்டதாகவும் சிஎம்எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் மொத்த செலவில் பாஜகவின் பங்கு மட்டும் 45% என்றும் சிஎம்எஸ் கூறியுள்ளது.

தேர்தலில் மிகப்பெரிய தொகை செலவிடப்பட்டுள்ளது ஜனநாயகத்திற்கான அச்சுறுத்தல் என்றும் செலவுகளை குறைக்கும் வழிவகைகள் ஆராயப்பட வேண்டும் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது

இந்த விகிதத்தில், அடுத்த 2024 பொதுத் தேர்தலில் செலவினம் ரூ.1 லட்சம் கோடி ரூபாயை தாண்டலாம் என  சி.எம்.எஸ்.சின் தலைவர் என். பாஸ்கரா ராவ் தெரிவித்தார்.

தேர்தல் செலவு அனைத்து ஊழல்களுக்கும்  மூலமாக  உள்ளது. இதை நாம் தீர்க்க முடியாது என்றால்   இந்தியாவில் ஊழலை ஒழிக்க முடியாது என என். பாஸ்கரா ராவ் தெரிவித்தார்.

எண்செலவுசதவீதம்செலவு கோடியில்
1வாக்காளர்கள் நேரடிச் செலவு20-2512000-15000
2பிரச்சாரம்/ விளம்பரங்கள்30-3520000-25000
3உபகரண செலவு8-105000-6000
4முறையான / தேர்தல் ஆணைய செலவு15-2010000-12000
5இதர செலவுகள்
மொத்தம் 55000-60000

Next Story