புதிய எம்.பி.க்கள் பதவி பிரமாணம் தேர்தலுக்கு பின் முதல் கூட்டத்தொடர் நாடாளுமன்றம் ஜூன் 6-ந்தேதி கூடுகிறது ஜனாதிபதி உரை நிகழ்த்துகிறார்


புதிய எம்.பி.க்கள் பதவி பிரமாணம் தேர்தலுக்கு பின் முதல் கூட்டத்தொடர் நாடாளுமன்றம் ஜூன் 6-ந்தேதி கூடுகிறது ஜனாதிபதி உரை நிகழ்த்துகிறார்
x
தினத்தந்தி 28 May 2019 5:45 AM IST (Updated: 28 May 2019 5:14 AM IST)
t-max-icont-min-icon

தேர்தலுக்கு பின், நாடாளுமன்றம் முதன் முதலாக வருகிற ஜூன் 6-ந்தேதி கூடுகிறது. முதல் நாள் நடைபெறும் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்துகிறார். தற்காலிக சபாநாயகர், புதிய எம்.பி.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

புதுடெல்லி,

17-வது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுக்க ஏப்ரல் 11-ந்தேதி தொடங்கி கடந்த 19-ந்தேதி முடிய 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வாக்குப்பதிவு நடந்த 542 தொகுதிகளில் 353 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதில் பாரதீய ஜனதா மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மை பெற்றது.

என்றாலும் தோழமை கட்சிகளையும் சேர்த்துக்கொண்டு பாரதீய ஜனதா மீண்டும் கூட்டணி ஆட்சி அமைக்கிறது. புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட பாரதீய ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் மோடி மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து, ஜனாதிபதி விடுத்த அழைப்பை ஏற்று அவர் வருகிற 30-ந்தேதி தொடர்ந்து 2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார். அவருடன் மந்திரிகளும் பதவி ஏற்பார்கள்.

காங்கிரஸ் அல்லாத ஒரு தலைவர் தொடர்ந்து இருமுறை பிரதமராக பதவி ஏற்பது இதுவே முதல் முறை ஆகும். இதற்கு முன் காங் கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜவகர்லால் நேரு, அவரது மகள் இந்திராக காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் தொடர்ந்து இருமுறை பிரதமராக பதவி வகித்து உள்ளனர்.

இந்தநிலையில், புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட 17-வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் வருகிற ஜூன் மாதம் 6-ந்தேதி தொடங்குகிறது. ஜூன் 15-ந்தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

முதல் நாள் கூட்டம், மக்களவைக்கு புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.பி.க்கள் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் கூட்டு கூட்டமாக நடைபெறும். அந்த கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்துவார்.

அன்றே நாடாளுமன்ற மூத்த உறுப்பினர் ஒருவர் தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது. அவர் புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார்.
ஜூன் 10-ந்தேதிக்கு முன் சபாநாயகர் தேர்ந்து எடுக்கப்படுவார்.

அதன்பிறகு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும். பின்னர் அந்த விவாதத்துக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து பேசுவார். அதன்பிறகு அந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்படும்.

பிரதமர் மோடி தலைமையிலான புதிய மந்திரிசபை கூட்டம் 31-ந்தேதி நடைபெறுகிறது. நாடாளுமன்றம் கூடும் தேதியும், எத்தனை நாட்கள் கூட்டத்தொடரை நடத்துவது என்பது பற்றியும் அதில் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story