குடியரசு தலைவரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோடி


குடியரசு தலைவரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோடி
x
தினத்தந்தி 25 May 2019 9:37 PM IST (Updated: 25 May 2019 9:37 PM IST)
t-max-icont-min-icon

குடியரசு தலைவரை சந்தித்து ஆட்சியமைக்க நரேந்திர மோடி உரிமை கோரினார்.

புதுடெல்லி,

சமீபத்தில் நடந்து முடிந்த 17வது மக்களவை தேர்தலில் பா.ஜ.க. 303 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் உள்ளது.  பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350க்கும் அதிகமாக இடங்களை கைப்பற்றி இருக்கிறது.

இதனை தொடர்ந்து டெல்லியில் நடந்த பா.ஜ.க. கூட்டணி கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் பா.ஜ.க. நாடாளுமன்ற குழு தலைவராக பிரதமர் மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.  இதன்பின்னர் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித் ஷா தலைமையில், பிரகாஷ் சிங் பாதல், ராஜ்நாத் சிங், நிதீஷ் குமார், ராம்விலாஸ் பஸ்வான், சுஷ்மா சுவராஜ், உத்தவ் தாக்கரே, நிதீன் கட்காரி, கே. பழனிசாமி, கன்ராட் சங்மா மற்றும் நெய்பியூ ரியோ உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் அடங்கிய குழு ஒன்று டெல்லி சென்றது.  அங்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துடன் அமித் ஷா சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பில், பா.ஜ.க.வின் நாடாளுமன்ற கட்சி தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என்ற தகவல் அடங்கிய கடிதத்தினை ராம்நாத்திடம் அமித்ஷா வழங்கினார்.  

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினரின் ஆதரவு கடிதங்களும் அவரிடம் வழங்கப்பட்டன.  இதனை அடுத்து குடியரசு தலைவரை சந்தித்து ஆட்சியமைக்க நரேந்திர மோடி உரிமை கோரினார்.  அவரை ஆட்சியமைக்க குடியரசு தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.  இதன்படி, வருகிற 30ந்தேதி பிரதமராக மோடி பதவியேற்க கூடும் என்று தகவல் தெரிவிக்கின்றது.

Next Story