கேசிஆர் ‘ஓவர் கான்பிடன்ஸ்’... காலூன்றிய பா.ஜனதா...!


கேசிஆர் ‘ஓவர் கான்பிடன்ஸ்’... காலூன்றிய பா.ஜனதா...!
x
தினத்தந்தி 24 May 2019 4:35 PM IST (Updated: 24 May 2019 4:35 PM IST)
t-max-icont-min-icon

2019 நாடாளுமன்றத் தேர்தலில் தென் மாநிலங்களில் கர்நாடகாவை தவிர்த்து தெலுங்கானாவில் பா.ஜனதா 4 தொகுதிகளில் வெற்றியை தனதாக்கியது.

தென் மாநிலங்களில் கர்நாடகம் மட்டுமே பா.ஜனதா ஆட்சி செய்யும், ஆதிக்கம் செலுத்தும் அளவிற்கு சாதகமான மாநிலமாக இருந்து வருகிறது. கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் பா.ஜனதா 25 தொகுதிகளை தனதாக்கியது. அங்கு ஆளும் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணிக்கு தலா ஒருதொகுதி கிடைத்தது. பா.ஜனதா ஆதரவு பெற்ற சுயேட்சை ஒருவரும் வெற்றிப்பெற்றுள்ளார். இப்போது தென்னிந்தியாவில் கர்நாடகம் தவிர்த்து ஒரு மாநிலத்தில் பா.ஜனதா களமிறங்கியுள்ளது. தெலுங்கானாவில் பா.ஜனதா 4 தொகுதிகளில் வென்றுள்ளது. பா.ஜனதா திட்டமிட்டு செயல்பட்டதற்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது என்றே கூறலாம்.

2018 மே மாதம் கர்நாடக தேர்தல் முடிவுகள் வெளியான போது 104 தொகுதிகளில் வென்ற பா.ஜனதா ஆட்சியை அமைத்தது. ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் வெளியேறியது. இதனையடுத்து மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி அங்கு ஆட்சியை அமைத்தது. இதனையடுத்து தெலுங்கானாவை நோக்கி பா.ஜனதாவின் பார்வை திரும்பியது. அதற்கான திட்டத்தில் பா.ஜனதா ஸ்திரமாக செயல்பட தொடங்கியது.


தெலுங்கானா மாநிலத்தில் 2019 நாடாளுமன்றத் தேர்தலுடன் தேர்தல் நடக்கவேண்டும். ஆனால் 2018 இறுதியிலே ஆட்சியை கலைத்து முன்கூட்டியே தேர்தலை சந்திக்க தயாரானார் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் (கேசிஆர்). பா.ஜனதாவும் களமிறங்கியது. பா.ஜனதா கூட்டணியில் இருந்த தெலுங்கு தேசம் தனியாக தேர்தலை சந்தித்தது. மாநிலத்தில் தான் தான் ராஜா என்பதை நிரூபிக்கும் வகையில் அமோக வெற்றியை தனதாக்கினார் சந்திரசேகர ராவ். சிறு கட்சிகளுடன் கூட்டணியில் போட்டியிட்ட பா.ஜனதாவிற்கு தோல்விதான் மிஞ்சியது. எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 5-ல் இருந்து ஒன்றாக குறைந்தது.  


காலூன்றியது பா.ஜனதா
 
இப்போது 2019 தேர்தலில் மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சிக்கு சவாலாக பா.ஜனதாவின் வளர்ச்சி உருவாகியுள்ளது. தெலுங்கானாவில் மொத்தம் உள்ள 17 தொகுதிகளில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி 9 தொகுதியிலும், பா.ஜனதா 4 தொகுதியிலும், காங்கிரஸ் 3 தொகுதியிலும், மஜ்லிஸ் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றியை தனதாக்கியது. பா.ஜனதா 4 இடங்களில் வென்று மாநிலத்தில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. இது எதிர்பார்க்காத ஒன்றாகவே உள்ளது. சந்திரசேகர ராவின் மகள் கவிதா நிஜாமாபாத் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார். பா.ஜனதா வேட்பாளர் அரவிந்த் தர்மபுரி 480584 வாக்குகளை வாங்கினார். இதுவே கவிதா 409709 வாக்குகளை வாங்கினார். வெற்றி வாக்கு வித்தியாசம் 70 ஆயிரத்திற்கும் மேலாகும். 

2018 சட்டசபைத் தேர்தலில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சிக்கு 46.9% வாக்கு கிடைத்தது. காங்கிரசுக்கு28.4% வாக்கு கிடைத்தது. பா.ஜனதாவிற்கு 7.1% வாக்கு கிடைத்தது. இப்போது பா.ஜனதாவிற்கு ஜாக்பாட் அடித்துள்ளது.  2019 நாடாளுமன்றத் தேர்தலில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியின் வாக்கு வங்கியில் 6 சதவிதம் வரையில் சரிவு ஏற்பட்டுள்ளது. இப்போது தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சிக்கு 41.29% வாக்குகள்தான் கிடைத்துள்ளது. அதுவே காங்கிரசின் வாக்கு வங்கியில் உயர்வு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் 29.48% வாக்குகளைப் பெற்றுள்ளது. பா.ஜனதாவின் வாக்கு வங்கி 19.45% சதவீதமாக உயர்ந்துள்ளது. பா.ஜனதா திட்டமிட்டப்படி வெற்றியை பதிவு செய்துவிட்டது. 

தெலுங்கானாவில் 2014 தேர்தலில் 17 தொகுதிகளில் 11 தொகுதிகளை தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி பெற்றது. இப்போது அதனுடைய எண்ணிக்கை 9 ஆக குறைந்துவிட்டது. காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவிற்கு அக்கட்சி இத்தேர்தலில் அதிகமான இடத்தை கொடுத்துள்ளது. பா.ஜனதாவிற்கு அதிக லாபம் கிடைத்துள்ளது. தெலுங்கானா ராஷ்டீரிய சமிதிக்கு பின்னடைவு, கவிதா தோல்வி ஆகியவை சந்திரசேகர ராவை அப்-செட் அடைய செய்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டசபைத் தேர்தல் இடையே ஒப்பீடு கூடாது என்றாலும் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி உஷார் நிலையில் இருக்க வேண்டிய தருணமாகும்.

தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி மத்தியில் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணி ஆட்சிக்கு முயற்சி செய்தது. இப்போது சந்திரசேகர ராவ் (கேசிஆர்) மத்தியில் கவனம் செலுத்துவதைக் காட்டியிலும் மாநிலத்தில் கவனம் செலுத்துவது அவசியமாகும். இப்போது பா.ஜனதாவிற்கு மத்தியில் எந்த ஒரு கட்சியின் கூட்டணியும் அவசியம் கிடையாது. இந்நிலை கேசிஆர் மற்றும் அவருடைய கட்சிக்கு நெருக்கடியை கொடுக்க வாய்ப்பு உள்ளது என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். 2018 தேர்தலில் வெற்றி, மக்களின் அமோக ஆதரவால் ஓவர் கான்பிடன்ஸில் இருந்த சந்திரசேகர ராவை விழித்துக்கொள்ள வைத்துள்ளது தேர்தல் முடிவுகள்...

Next Story