போலி கருத்துக்கணிப்பு முடிவுகளால் மனமுடைய வேண்டாம் -ராகுல் காந்தி வேண்டுகோள்
போலி கருத்துக்கணிப்பு முடிவுகளால் மனமுடைய வேண்டாம் என காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகிறது. 19-ம் தேதி வாக்குப்பதிவு முடிந்ததும் இந்திய ஊடகங்கள் கருத்துக்கணிப்புக்களை வெளியிட்டன. இதில் பா.ஜனதா கூட்டணி 300-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றிப்பெற்று ஆட்சியமைக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பா.ஜனதா தொண்டர்கள் வெற்றியை கொண்டாடி வருகிறார்கள். காங்கிரஸ் தொண்டர்கள் 23-ம் தேதி வரையில் காத்திருப்போம் என கூறிவருகிறார்கள்.
இந்நிலையில், போலி கருத்துக்கணிப்பு முடிவுகளால் மனமுடைய வேண்டாம் என காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், “அடுத்த 24 மணி நேரங்கள் மிகவும் முக்கியமானது. மிகவும் உஷாராகவும், கண்காணிப்புடனும் இருங்கள். பயம் அடைய வேண்டாம். நீங்கள் உண்மைக்காக போராடுகிறீர்கள். போலியான கருத்துக்கணிப்பு பிரசாரத்தினால் நீங்கள் மனம் உடையவேண்டாம். உங்கள் மீதும் காங்கிரஸ் மீதும் நம்பிக்கை வையுங்கள். உங்களுடைய கடினமான உழைப்பு வீண் போகாது,” என காங்கிரஸ் தொண்டர்கள் நம்பிக்கையுடன் இருக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதமாக பிரியங்கா காந்தி அழைப்பு விடுக்கையில், எனது அருமை காங்கிரஸ் தொண்டர்களே சகோதரிகளே, சகோதரர்களே.. வதந்திகளும், கருத்துக் கணிப்பு முடிவுகளும் உங்களை நம்பிக்கை இழக்க செய்யாமல் பார்த்து கொள்ளுங்கள். உங்களுடைய உறுதியை உடைப்பதற்காகவே இதுபோன்ற வேலை செய்யப்படுகிறது. இதற்கெல்லாம் கவலை கொள்ளாமல் விழிப்புடன் இருப்பது மிகவும் அவசியம். வாக்கு எண்ணிக்கை மையம், வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள மையங்கள் அருகே தொடர்ந்து உங்கள் பார்வையை கவனமாக வைத்திருங்கள். நமது கூட்டு முயற்சிக்கு நிச்சயம் பலன் கிடைக்கும் எனக் குறிப்பிட்டு இருந்தார்.
Related Tags :
Next Story