தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது; புகார் மனு அளித்த பின் எதிர்கட்சி தலைவர்கள் கூட்டாக பேட்டி


தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது; புகார் மனு அளித்த பின் எதிர்கட்சி தலைவர்கள் கூட்டாக பேட்டி
x
தினத்தந்தி 21 May 2019 5:27 PM IST (Updated: 21 May 2019 5:27 PM IST)
t-max-icont-min-icon

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டாக கூறினர்.

புதுடெல்லி:

பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக நடந்த தேர்தலில் 67.11 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. இந்த வாக்குகளை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) எண்ணி முடிவுகள் அறிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பாரதிய ஜனதா தனி  மெஜாரிட்டியுடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளன. இதனால் காங்கிரஸ் மற்றும் 20-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கலக்கம் அடைந்துள்ளனர்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வரும் வரை எதிர்க்கட்சிகள் மிகவும் உற்சாகமாக இருந்தன. பாரதிய ஜனதா ஆட்சிக்கு வருவதைத் தடுக்க  என்னென்ன செய்யலாம் என்றும் ஆலோசித்து வந்தன. கருத்துக் கணிப்புகள் வந்ததும் எதிர்கட்சிகளின் செயல்பாடுகளில் மந்தம் ஏற்பட்டது.

என்றாலும் எதிர்க்கட்சித் தலைவர்களை ஓரணியில் திரட்டும் முயற்சிகளில் ஆந்திர முதல்-மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டுள்ளார். கடந்த வாரம் அவர் காங்கிரஸ், ஆம்-ஆத்மி, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார்.

நேற்று மீண்டும் கொல்கத்தா சென்று மம்தா பானர்ஜியை சந்தித்துப் பேசினார். சுமார் 45 நிமிடம் அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது காங்கிரஸ் ஆதரவுடன் மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து மத்தியில் ஆட்சி அமைப்பது பற்றி அவர்கள் விரிவான ஆலோசனை நடத்தியதாக தெரிய வந்துள்ளது.

சந்திரபாபு நாயுடுவின் அடுத்தடுத்த முயற்சி காரணமாக நேற்று சோனியாவை மாயாவதி சந்தித்து பேச முடிவு செய்திருந்தார். ஆனால் கருத்துக் கணிப்பு முடிவைத் தொடர்ந்து மாயாவதி தனது டெல்லி பயணத்தை ரத்து செய்தார். அவர் நேற்று அகிலேஷ் யாதவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் மாநில கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சிகளை சந்திரபாபு நாயுடு மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து டெல்லியில் இன்று எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்தித்து பேசினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தெலுங்கு தேசம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, ஆம் ஆத்மி, மதச்சார்பற்ற ஜனதா தளம், ராஷ்டீரிய ஜனதா தளம் உள்பட 21 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். 
இந்த கூட்டத்தில் நாளை மறுநாள் தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும், அந்த அரசியல் சூழலுக்கு ஏற்ப செயல்படுவது பற்றி விவாதிக்கப்படுகிறது. எனவே இன்றையக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களிடம் ஒருமித்த கருத்து உருவாக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் காங்கிரஸ் உள்ளிட்ட 21 எதிர்க்கட்சிகளின் தலைவர்களும், தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் மனுவை வழங்கினர்.

தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்திக்க செல்லும் குழுவில் காங்கிரஸ் சார்பில் அபிஷேக் மனு சிங்வி, அகமது படேல், ஆம்ஆத்மி சார்பில் சஞ்சய்சிங், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் சீதாராம் யெச்சூரி, பகுஜன் சமாஜ் சார்பில் சதீஷ் மிஸ்ரா, தெலுங்கு தேசம் சார்பில் சந்திரபாபு நாயுடு, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் டெரிக் ஓபிரைன், தி.மு.க. சார்பில் கனிமொழி டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வாக்கு இயந்திரங்களில் மோசடி நடைபெற்றதாக,தேர்தல் ஆணையத்தில் புகாரளித்தபின் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர் அப்போது அவர்கள் கூறியதாவது:-

வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு ஒப்புகை சீட்டை சரிபார்ப்பதாக கூறியதை ஏற்க முடியாது தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் சந்தேகத்தை  ஏற்படுத்துகிறது. எங்களது கோரிக்கைகளை மீண்டும் ஆலோசித்து முடிவெடுப்பதாக தேர்தல் ஆணையர் கூறினார்.

ஒன்றரை மாதங்களாக நாங்கள் கோரிக்கை வைத்தோம் தாமதம் ஏன்.  பெரும்பாலான மக்களின் ஆதரவை பெற்ற 22 கட்சிகளின்  கோரிக்கை இது.

இது நீண்ட நாள் கோரிக்கை நியாயமான கோரிக்கை. முன்னாள் தேர்தல் ஆணையர்களும் எங்கள் கோரிக்கையை ஏற்று கொண்டுள்ளனர்.  மக்களின் தீர்ப்பை மாற்றி அமைக்க கூடாது. இதுவே எங்கள் கோரிக்கை என்று கூறினர்.

Next Story