மக்களவைத் தேர்தலில் கடந்த தேர்தலைவிட அதிக வாக்குகள் பதிவாகியுள்ளது -தலைமை தேர்தல் ஆணையம்


மக்களவைத் தேர்தலில் கடந்த தேர்தலைவிட அதிக வாக்குகள் பதிவாகியுள்ளது -தலைமை தேர்தல் ஆணையம்
x
தினத்தந்தி 21 May 2019 1:59 PM IST (Updated: 21 May 2019 1:59 PM IST)
t-max-icont-min-icon

மக்களவைத் தேர்தலில் ஏழு கட்ட வாக்குப்பதிவை சேர்த்து மொத்தம் 67.11 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி

542 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் சராசரியாக 67.11 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் இல்லாத அளவிற்கு அதிகபட்ச வாக்கு சதவீதம் இது என்றும் தேர்தல்  ஆணையம் கூறியுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு 543 தொகுதிகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 66.4 சதவீத வாக்குகள் பதிவாகின. ஆனால் தற்போது 542 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று அதைவிட 0.71 சதவீத வாக்குகள் அதிகமாகப் பதிவாகியுள்ளன. இது முதல்கட்ட தகவல்தான் என்றும் முழுமையான கணக்கீட்டிற்கு பின்னர் வாக்கு எண்ணிக்கை சதவீதம் மேலும் அதிகரிக்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

2019-ம் ஆண்டு தேர்தலில் அதிகபட்சமாக லட்சதீவில் 85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக காஷ்மீரில் 29.4 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை  ஒப்பிடும்போது வாக்குசதவீதம் அதிகரிப்பில் மத்திய பிரதேசம் முன்னிலை வகிக்கிறது. அங்கு கடந்த தேர்தலைவிட தற்போது 9 புள்ளி 6 சதவீத வாக்குகள் அதிகரித்து 71 புள்ளி 2 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

வாக்கு சதவீத வீழ்ச்சியில் ஜம்மு காஷ்மீர் முதலிடம் வகிக்கிறது. கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஜம்மு காஷ்மீரில் 49.7 சதவீத வாக்குகள்  பதிவாகியுள்ளன. தற்போது அது 20.3 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆண் வாக்காளர்கள் வாக்குகளைவிட பெண் வாக்காளர்களின் வாக்குகள் அதிகம் பதிவாகியுள்ளன.

Next Story