டெல்லி விருந்தில் கலந்துகொள்ள வருமாறு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அமித்ஷா அழைப்பு
பாரதீய ஜனதா கூட்டணி கட்சி தலைவர்களுக்கு பாஜக தலைவர் அமித் ஷா சார்பில் நாளை விருந்து அளிக்கப்படுகிறது.
புதுடெல்லி
இந்திய மக்களவைக்காக 543 தொகுதிகளில் வேலூர் தவிர்த்து 542 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடந்து நிறைவு பெற்றுள்ளது. ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி, மே 19 ஆம் தேதி வரை நடைபெற்ற தேர்தல், மிகப்பெரிய அசம்பாவித சம்பவங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடைபெற்றுள்ளது. மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்றோடு முடிவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன. அந்த வகையில் மத்தியில் ஆளும் பாஜக 300 இடங்களுக்கு மேல் வெற்றிப்பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என கூறப்படுகிறது.
எனினும் தமிழத்தை பொருத்தவரையில் தான் கூட்டணி அமைத்துள்ள அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு தமிழகத்தில் 6 இடங்கள் வரையே கிடைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களுக்கு பாஜக தலைவர் அமித் ஷா நாளை விருந்து அளிக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், பாஜக தலைவர் அமித் ஷா கூட்டணி கட்சி தலைவர்களுக்கு டெல்லியில் நாளை விருந்து அளிக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெல்லி விருந்தில் கலந்துகொள்ள வருமாறு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அமித்ஷா சார்பில் அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story