உ.பி.யில் கிராம மக்களை வாக்களிக்கவிடாமல் விரலில் மை வைப்பு, வாக்குக்கு ரூ.500 ரொக்கம்


உ.பி.யில் கிராம மக்களை வாக்களிக்கவிடாமல் விரலில் மை வைப்பு, வாக்குக்கு ரூ.500 ரொக்கம்
x
தினத்தந்தி 19 May 2019 4:57 PM IST (Updated: 19 May 2019 4:57 PM IST)
t-max-icont-min-icon

உ.பி.யில் கிராம மக்களை வாக்களிக்கவிடாமல் அவர்கள் கை விரலில் வலுக்கட்டாயமாக மை வைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் சந்தாவுலி பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கிராமத்தில், வாக்காளர்கள் கையில் மையை வலுக்கட்டாயமாக வைத்துவிட்டு அவர்களை வாக்களிக்கவிடாமல் பா.ஜனதாவினர் தடுத்தனர் என தெரியவந்துள்ளது. வாக்களிக்க வேண்டாம் நாங்களே உங்களுடைய வாக்கை செலுத்திவிடுகிறோம் என வாக்காளர்கள் கையில் ரூ. 500 ரொக்க பணத்தையும் வைத்து விரட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தாரா ஜிவான்பூரில் கிராம மக்கள், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் தொண்டர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொண்டனர். 

அப்பகுதியை சேர்ந்த ஒருவர் பேசுகையில், “எந்த கட்சிக்கு வாக்களிக்க போகிறீர்கள் என்று கேட்டார்கள். அப்போது நீங்கள் வாக்களிக்க வேண்டாம். யாரிடமும் சொல்ல வேண்டாம் எனக் கூறினர். கிராம மக்களின் கையில் ரூ. 500 வலுக்கட்டாயமாக கொடுத்தனர்,” எனக் கூறியுள்ளார். நேற்று பணம் வழங்கப்பட்டு, கிராம மக்கள் கை விரலில் மை வைக்கப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் போராட்டம் மேற்கொண்டனர்.

இதுதொடர்பாக சப்-டிவிஷ்னல் மாஜிஸ்திரேட் குமார் ஹர்ஷ் பேசுகையில், தாரா ஜிவான்பூர்  கிராமத்தில் உள்ள சிலர் தங்கள் கைகளில் வலுக்கட்டாயமாக மை போடப்படுவதாகவும், அவர்களுக்கு பணம் கொடுத்ததாகவும் கூறியுள்ளனர். அவர்களால் வாக்களிக்க முடியாது எனக் கூறியுள்ளனர். அப்படி கிடையாது. அவர்கள் வாக்களிக்கலாம்.  அவர்களுடைய குற்றச்சாட்டு தொடர்பாக நடவடிக்கையை மேற்கொள்வோம் எனக் கூறியுள்ளார்.  

இதற்கிடையே பா.ஜனதாதான் இந்த சம்பவத்திற்கு பின்னால் உள்ளது என்பதை அக்கட்சி நிராகரித்துள்ளது. பா.ஜனதா செய்தித் தொடர்பாளர் ஹரிஷ் ஸ்ரீவாஸ்தவா லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எங்களுடைய எதிரிகளால் எங்களுக்கு அவமதிப்பு ஏற்பட வேண்டும் என்று சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. நாங்கள் அதிக அளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரும் நிலையில் நாங்கள் ஏன் இதுபோன்ற செயலில் ஈடுபட வேண்டும்?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். 

Next Story