நாட்டின் முக்கிய அமைப்புகளின் புனிதத்தை மோடி அழிக்கிறார் - காங்கிரஸ் கருத்து


நாட்டின் முக்கிய அமைப்புகளின் புனிதத்தை மோடி அழிக்கிறார் - காங்கிரஸ் கருத்து
x
தினத்தந்தி 18 May 2019 8:09 PM IST (Updated: 18 May 2019 8:09 PM IST)
t-max-icont-min-icon

தேர்தல் ஆணைய பிரச்சனையில் நாட்டின் முக்கிய அமைப்புகளின் புனிதத்தை மோடி அழிக்கிறார் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.


தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பிரதமர் நரேந்திர மோடி, பாரதீய ஜனதா கட்சி தலைவர் அமித்ஷா ஆகியோர் மீது எழுந்த புகார்களில் அவர்கள் குற்றமற்றவர்கள் என்று தேர்தல் ஆணையம் விடுவித்தது. அதே நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் மீதான புகார்களில் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்துகொள்கிறது என கருத்து எழுந்தது.

தேர்தல் விதிமுறை புகார்கள் குறித்து முடிவெடுக்கும் மூவர்குழு ஒரு மனதாக முடிவு எடுக்க வேண்டும் இல்லாவிட்டால், பெரும்பான்மை முடிவே இறுதியானது.  தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா, சுஷில்சந்திரா ஆகிய இருவரும் பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோரின் பேச்சுக்கு நற்சான்று அளித்ததாகவும், மற்றொரு ஆணையர் அசோக் லவாசா  எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தகவல் வெளியானது.

 இந்நிலையில் பெருன்மையாக இரு ஆணையர்கள் முடிவெடுப்பதால், சிறுபான்மையாக இருக்கும் தன்னுடைய கருத்து பதிவாகாமல் இருப்பதாக லவாசா குற்றச்சாட்டியதாக தெரிகிறது.  இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் தேர்தல் விதிமுறைகள் மீறல் தொடர்பான புகார்களை விசாரிக்கும் கூட்டத்தில் பங்கேற்பதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்கும்படி லவாசா வேண்டுகோள் விடுத்தாக தகவல் வெளியாகியது. இதுதொடர்பாக கடிதமும் எழுதியுள்ளார். ஏற்கனவே தேர்தல் ஆணையம் பா.ஜனதாவின் நெருக்கடியில் செயல்படுகிறது என குற்றம் சாட்டிய எதிர்க்கட்சிகளுக்கு இது கூடுதல் பலம் சேர்த்தது. 

இந்நிலையில் தேர்தல் ஆணைய பிரச்சனையில் நாட்டின் முக்கிய அமைப்புகளின் புனிதத்தை மோடி அழிக்கிறார் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா பேசுகையில், தேர்தல் கமி‌ஷன் விதிகள் ஒருமித்த முடிவுக்குத்தான் முன்னுரிமை தெரிவிக்கின்றன. ஆனால் ஒருமித்த முடிவு இல்லை என்கிறபோது பெரும்பான்மை முடிவை ஏற்கச்சொல்கிறது. அரசியல் சாசன அமைப்பு என்கிற வகையில், சிறுபான்மை முடிவும் பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால் மோடியையும், அமித் ஷாவையும் பாதுகாக்க இது மிதிபடுகிறது எனக் கூறினார்.  

பிரதமர் மோடியும், பா.ஜனதா தலைவர் அமித் ஷாவும் தேர்தல் நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறியதாக காங்கிரஸ் கட்சி புகார் அளித்தது. ஆனால் அவை குப்பைத்தொட்டியில் போடப்பட்டு விட்டன. இந்தியாவின் முக்கிய அமைப்புகளின் புனிதத்தை அழிக்கிற பணியை பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டுள்ளார் எனவும் காட்டமாக குறிப்பிட்டார். இதேபோன்று பிற கட்சிகளும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றன.


Next Story