பிரக்யாசிங்கை மன்னிக்கவே மாட்டேன் - பிரதமர் மோடி
மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே தேசபக்தர் என்ற சர்ச்சை கருத்தை தெரிவித்த பிரக்யாசிங்கிற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன், அரவக்குறிச்சி தொகுதியில் கடந்த 12-ந் தேதி பிரசாரம் செய்கையில் “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து; அவர்தான் நாதுராம் கோட்சே. அங்குதான் தீவிரவாதம் தொடங்குகிறது. காந்திஜியின் படுகொலைக்கு பதில் பெறத்தான் இங்கு வந்துள்ளேன். நான் காந்திஜியின் கொள்ளுப்பேரனாக இங்கு வந்துள்ளேன்” என கூறினார்.
இந்து தீவிரவாதம் என அவர் கூறிய வார்த்தைகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டன. அவர் மீது வழக்குகள் குவிகின்றன. இந்த நிலையில் பெண் சாமியாரும், மத்திய பிரதேச மாநிலம் போபால் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கை எதிர்த்து போட்டியிடும் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளருமான பிரக்யா சிங் தாக்குர் டெலிவிஷன் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவரிடம் நாதுராம் கோட்சேயை இந்து தீவிரவாதி என கமல்ஹாசன் கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், “நாதுராம் கோட்சே தேச பக்தராக இருந்தார்; இருக்கிறார்; அப்படியே தொடர்ந்து இருப்பார்” என பதில் அளித்தார். அதுமட்டுமின்றி, “நாதுராம் கோட்சேயை இந்து தீவிரவாதி என்று சொல்கிறவர்கள், தங்களை பார்க்கட்டும். அவர்களுக்கு இந்த தேர்தலில் சரியான பதிலடி கிடைக்கும்” என குறிப்பிட்டார்.
மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேயை பிரக்யா சிங் தாக்குர் தேசபக்தர் என்று சான்று அளித்திருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் பிரக்யா சிங் தாக்குர் கருத்தை பாரதீய ஜனதா கட்சி ஏற்கவில்லை. கட்சியின் தலைமையில் இருந்து நெருக்கடி ஏற்படவும் பிரக்யா சிங் மன்னிப்பு கோரினார்.
இந்நிலையில் பிரதமர் மோடியும் பிரக்யா சிங்கிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். “மகாத்மா காந்தியை அவமதிப்பு செய்த பிரக்யா சிங்கை மன்னிக்க முடியாது,” எனக் கூறியுள்ளார் பிரதமர் மோடி.
Related Tags :
Next Story