தேர்தல் ஆணையம் பா.ஜனதாவின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது - மம்தா காட்டம்


தேர்தல் ஆணையம் பா.ஜனதாவின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது - மம்தா காட்டம்
x
தினத்தந்தி 15 May 2019 9:45 PM IST (Updated: 15 May 2019 9:45 PM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதாவின் கட்டுப்பாட்டின் கீழ் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் 19-ம் தேதி கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவுகள் நடக்கிறது. மாநிலத்தில் அமித்ஷா ஊர்வலத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜனதா தொண்டர்களிடையே கடும் மோதல்கள் ஏற்பட்டு பெரிய வன்முறை வெடித்தது.  இதனையடுத்து அரசியல் சட்டப்பிரிவு 324-ஐ கையிலெடுத்த தேர்தல் ஆணையம் ஒரு நாள் முன்னதாகவே அதாவது மே 16-ம் தேதி இரவு 10 மணியுடன் அனைத்து பிரசாரங்களும் முடித்துக் கொள்ளப்பட வேண்டும் என உத்தரவிட்டது. இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, தேர்தல் ஆணையம் பா.ஜனதாவின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது என குற்றம் சாட்டியுள்ளார். 

மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், அமித் ஷா தனது கூட்டத்தின் மூலம் வன்முறைகளை உருவாக்கியுள்ளார், வித்யாசாகர் சிலை சிதைக்கப்பட்டது. இதற்காக பிரதமர் மோடி வருத்தப்படவில்லை. மேற்கு வங்காள மக்கள் இதனை தீவிரமாக எடுத்துள்ளனர். அமித் ஷாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இன்று அமித்ஷா செய்தியாளர்களை சந்தித்து பேசினார், தேர்தல் ஆணையத்திற்கு மிரட்டல் விடுத்தார். அதன் விளைவுதான் பிரசாரத்திற்கு ஒருநாள் தடையா? வங்க மக்கள் பயப்படமாட்டார்கள். 

நான் மோடிக்கு எதிராக பேசுவதால்தான் மேற்கு வங்கம் இலக்காக்கப்படுகிறது. தேர்தல் ஆணையத்தை பா.ஜனதா நடத்துகிறது. இது இதுவரையில் இல்லாத ஒருநடவடிக்கையாகும். நேற்று வன்முறையே அமித் ஷாவால் நடத்தப்பட்டது. தேர்தல் ஆணையம் அமித்ஷாவிற்கு நோட்டீஸ் விடுக்காதது ஏன்? பிரசாரம் செய்ய தடை விதிக்காதது ஏன்? குண்டர்கள் வெளி மாநிலங்களில் இருந்து வந்தார்கள், அவர்கள் காவி நிறம் அணிந்துக்கொண்டு வன்முறையை நிகழ்த்தியுள்ளனர். 

பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது இருந்த வன்முறைகளை உருவாக்கியுள்ளனர். தேர்தல் கமிஷனின் முடிவு நியாயமற்றது, அரசியல் ரீதியாக ஒருசார்பானது. பிரதமர் மோடி நாளை தன்னுடைய இரண்டு பேரணிகளை முடிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது எனக் கூறினார். 

மேலும் பேசுகையில், பிரதமர் மோடி உங்களால் உங்கள் மனைவியையே கவனித்துக் கொள்ளமுடியவில்லை, எப்படி நாட்டை கவனித்துக் கொள்வீர்கள்? எனக் கேள்வியையும் எழுப்பியுள்ளார் மம்தா பானர்ஜி. மாயாவதி இதுபோன்ற விமர்சனத்தை முன்வைத்ததால், தனிமனித தாக்குதலில் தரம் தாழ்ந்து விட்டார் என பா.ஜனதா விமர்சனம் செய்தது. இப்போது மம்தாவும் அதுபோன்று பேசியுள்ளார். 

Next Story