14வது மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது


14வது மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது
x
தினத்தந்தி 14 May 2019 9:47 PM IST (Updated: 14 May 2019 9:47 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் நடந்த 14வது மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது.

இந்தியாவில் கடந்த 2004ம் ஆண்டு ஏப்ரல் 20ந்தேதி முதல் மே 10ந்தேதி வரை 14வது மக்களவை தேர்தல் நடந்தது.  67 கோடிக்கும் கூடுதலான மக்கள் வாக்களிக்கும் தகுதி உடையவர்களாக இருந்தனர்.  இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 145 தொகுதிகளை கைப்பற்றியது.

இதேபோன்று பா.ஜ.க. 138 தொகுதிகளையும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு 43 தொகுதிகளையும், சமாஜ்வாதி 36 தொகுதிகளையும், ராஷ்டீரிய ஜனதா தளம் 24 தொகுதிகளையும் கைப்பற்றி இருந்தது.  கடந்த 8 வருடங்களாக ஆட்சியில் இல்லாத காங்கிரஸ் கட்சி கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் 335 உறுப்பினர்களை கொண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்தது.

அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஆச்சரியப்படத்தக்க வகையில் புதிய பிரதமராக பதவி ஏற்க மறுப்பு தெரிவித்து விட்டார்.  அதற்கு பதிலாக முன்னாள் நிதி மந்திரி மற்றும் பொருளாதார நிபுணரான மன்மோகன் சிங்கை பிரதமராகும்படி கேட்டு கொண்டார்.

கடந்த 1990ம் ஆண்டில் நரசிம்மராவ் தலைமையிலான அரசில் பணியாற்றிய அனுபவம் கொண்டவரான சிங், இந்தியாவின் முதல் பொருளாதார தாராளவாத திட்டத்திற்கான வடிவமைப்பாளர்களில் ஒருவராக காணப்பட்டார்.  அவர் மீதிருந்த நல்லெண்ணம் மற்றும் சோனியா காந்தியின் நியமனம் ஆகியவற்றால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் மற்றும் இடது சாரிகளின் ஆதரவு அவருக்கு கிடைத்தது.  இவரது தலைமையில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து 5 வருடங்கள் ஆட்சியில் நீடித்தது.

Next Story