மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு மூழ்கும் கப்பல் - மாயாவதி


மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு மூழ்கும் கப்பல்  - மாயாவதி
x
தினத்தந்தி 14 May 2019 8:03 PM IST (Updated: 15 May 2019 2:02 AM IST)
t-max-icont-min-icon

“பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மூழ்கும் கப்பல், பா.ஜனதாவை ஆர்.எஸ்.எஸ். கைவிட்டு விட்டது” என மாயாவதி கூறினார்.

லக்னோ,

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் செய்தியாளர்களை நேற்று சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தல் நேரங்களில் சில அரசியல்வாதிகள் கோவில்களுக்கு செல்வது தற்போது நாகரிகமாகி விட்டது. தேர்தல் நடத்தை விதிகளை மீறியதால் பிரசாரம் செய்ய தேர்தல் கமிஷனால் தடை விதிக்கப்பட்ட காலத்தில் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கோவிலுக்கு சென்றார். இது ஊடகங்களில் வெளியாகி அது செய்தியாக வெளிவருகிறது. இதனால் அவருக்கு தடை விதிக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறவில்லை. இது போன்ற செயல்களுக்கு, தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல் கோவில்களுக்கு செல்வது, சாலைகளில் பேரணி நடத்துவது போன்றவற்றுக்கு சில அரசியல் கட்சிகள் பெரும் அளவில் பணத்தை செலவிட்டு வருகின்றன. இந்த செலவினங்களை வேட்பாளரின் கணக்கில் சேர்க்க வேண்டும்.

கடந்த தேர்தலில் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் மக்கள் அக்கட்சிக்கு எதிரான மனநிலையில் உள்ளனர். மக்கள் ஏற்கனவே ஏமாந்து விட்டனர். இனியும் அவர்கள் ஏமாற மாட்டார்கள். பிரதமர் மோடி மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை போய்விட்டது. மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு மூழ்கும் கப்பல். இது அனைவருக்கும் தெரியும்.

இதற்கு மிகப்பெரிய உதாரணம், உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா தேர்தல் பிரசாரத்தின் போது ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் வேலை செய்யவில்லை. இதன் மூலம் பா.ஜனதா கட்சியை ஆர்.எஸ்.எஸ். கைவிட்டு விட்டது தெளிவாக தெரிகிறது. இதனால் மோடி மிகவும் அச்சத்தில் இருக்கிறார்.

இரட்டை வேடதாரி அரசியல்வாதிகளை மக்கள் இனியும் நம்ப தயாராக இல்லை. ஏற்கனவே சேவகர், டீ வியாபாரி, காவலாளி என பல அரசியல்வாதிகளை மக்கள் பார்த்து விட்டனர். அந்த பெயர்களை தன்னுடன் சேர்த்துக்கொண்டு மக்களை மோடி தவறாக வழிநடத்துகிறார்.

தற்போது நாட்டுக்கு உண்மையான, இந்திய இறையாண்மையை மதிக்கும் பிரதமர் தான் தேவை. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story