சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் பற்றிய கருத்து: சாம் பிட்ரோடா மன்னிப்பு கேட்க ராகுல் காந்தி வலியுறுத்தல்


சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் பற்றிய கருத்து: சாம் பிட்ரோடா மன்னிப்பு கேட்க ராகுல் காந்தி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 14 May 2019 4:30 AM IST (Updated: 14 May 2019 3:06 AM IST)
t-max-icont-min-icon

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறிய சாம் பிட்ரோடா மன்னிப்பு கேட்குமாறு கூறியிருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.

லூதியானா,

கடந்த 1984-ம் ஆண்டு, பிரதமராக இருந்த இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.

சமீபத்தில், இதுகுறித்த ஒரு கேள்விக்கு பதில் அளித்த காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு பிரிவு தலைவர் சாம் பிட்ரோடா, “ஆமாம் நடந்தது. அதற்கு என்ன?” என்று கூறினார். அவரது கருத்துக்கு பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் பதேகார் சாகிப் தொகுதியில் கன்னா என்ற இடத்தில் நேற்று நடந்த காங்கிரஸ் தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் முற்றிலும் தவறானது, துயரமானது. அக்கலவரம் பற்றிய கருத்துக்காக சாம் பிட்ரோடா வெட்கப்பட வேண்டும். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளேன்.

சீக்கியர் படுகொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், தண்டிக்கப்படுவார்கள்.

அதிகாரத்தை கைப்பற்றும் ஆசையில் பிரதமர் மோடி வானளாவிய வாக்குறுதிகளை அளித்து விட்டார். அவற்றில் ஒன்றைக்கூட அவரால் நிறைவேற்ற முடியவில்லை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியவில்லை. கருப்பு பணத்தை மீட்க முடியவில்லை. இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பான விவசாயிகளை மறந்து விட்டார்.

ஆனால், ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கும் காங்கிரசின் திட்டம், வெறும் வாக்குறுதி அல்ல, அது உறுதியான கொள்கை. இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.


Next Story