அமித்ஷாவின் பொதுக்கூட்டத்துக்கு மே.வங்க அரசு தடை: தேர்தல் ஆணையத்தில் முறையிட பாஜக திட்டம்


அமித்ஷாவின் பொதுக்கூட்டத்துக்கு மே.வங்க அரசு தடை: தேர்தல் ஆணையத்தில் முறையிட பாஜக திட்டம்
x
தினத்தந்தி 13 May 2019 11:03 AM IST (Updated: 13 May 2019 11:03 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காளத்தில் அமித்ஷாவின் பொதுக்கூட்டத்துக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.

கொல்கத்தா,

பாராளுமன்ற தேர்தல் ஆறு கட்டங்களாக முடிந்த நிலையில், 7-வது கட்ட மற்றும் இறுதி கட்ட தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறுகிறது.  தேர்தல் களம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களிடையே கடுமையான மோதல்கள் நடைபெற்று வருகின்றன.  

பிரதமர் மோடியும், மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜியும் காரசாரமாக ஒருவரையொருவர் தாக்கி பேசி வருகின்றனர். இந்நிலையில், இறுதிக்கட்ட பிரசாரத்துக்காக ஜாதவ்பூர் பகுதியில் பாஜக தலைவர் அமித் ஷாவின் மிக பிரமாண்டமான  பொதுக்கூட்ட பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டத்திற்கு அனுமதி அளிக்க போலீசார் மறுத்து விட்டனர். இந்த பேரணியில் பங்கேற்பதற்காக அமித் ஷா வரும் ஹெலிகாப்டர் தரையிறங்கவும் அனுமதி மறுக்கப்பட்டதால் அம்மாநில பாஜகவினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை இது ஏற்படுத்தியுள்ளது. 

அமித்ஷா பொதுக்கூட்டத்துக்கு தடை விதித்ததை கண்டித்து, போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தேர்தல் ஆணையத்தில் முறையிட இருப்பதாகவும் பாஜகவினர் தெரிவித்தனர். மேற்கு வங்காளத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கு வரும் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 

Next Story