நாடாளுமன்றத்துக்கு 6-வது கட்ட தேர்தல்: டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் 59 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு


நாடாளுமன்றத்துக்கு 6-வது கட்ட தேர்தல்: டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் 59 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 13 May 2019 5:45 AM IST (Updated: 13 May 2019 4:29 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்றத்துக்கு நேற்று நடைபெற்ற 6-வது கட்ட தேர்தலில், 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. டெல்லியில் சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வாக்களித்தனர்.

புதுடெல்லி,

சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ள இந்திய நாடாளுமன்ற தேர்தல் இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளது.

7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டதில் 5 கட்ட தேர்தல்கள் ஏற்கனவே நடந்து முடிந்து விட்டன. மொத்தம் 424 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்து உள்ளது. தமிழ்நாட்டின் வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தல் ஒத்தி போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், டெல்லி, உத்தரபிரதேசம், மத்தியபிர தேசம், பீகார், ஜார்கண்ட், அரியானா, மேற்குவங்காளம் ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் நேற்று 6-வது கட்ட தேர்தல் நடைபெற்றது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்த 59 தொகுதிகளில், 45-ஐ பாரதீய ஜனதா வென்றிருந்ததால், இந்த தேர்தல் அந்த கட்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய பாரதீய ஜனதா அரசில் இடம் பெற்றுள்ள மேனகாகாந்தி (உ.பி.- சுல்தான்பூர்), ஹர்சவர்த்தன் (டெல்லி- சாந்தினிசவுக்), ராதாமோகன் சிங் (பீகார்- பூர்வி சம்பரன்), நரேந்திரசிங் தோமர் (ம.பி.- மொரினா), கிருஷன்பால் குர்ஜார் (அரியானா- பரிதாபாத்), ராவ் இந்தர்ஜித் சிங் (அரியானா- குருகிராம்) ஆகிய 6 மந்திரிகள் நேற்றைய தேர்தலில் நட்சத்திர வேட்பாளர்கள் ஆவர்.

சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் போட்டியிடும் உத்தரபிரதேசத்தின் அசம்கார், காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கும், பாரதீய ஜனதா பெண் சாமியார் பிரயாக் சிங் தாக்குரும் போட்டியிடுகிற மத்திய பிரதேசத்தின் போபால் தொகுதிகளும் கவனத்தை ஈர்த்துள்ளன.

தலைநகர் டெல்லியில் 7 இடங்களுக்கு நடந்த தேர்தலில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி நிர்மாண் பவனிலும், அவரது மகனும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி அவுரங்கசீப் லேனிலும் ஓட்டுப்பதிவு செய்தனர்.

சாந்தினி சவுக் தொகுதியில் சிவில் லைன்ஸ் வாக்குச்சாவடியில் மின்னணு எந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியதாகவும், வாக்காளர்கள் அவதியுற்றதாகவும், இதே போன்றதொரு நிலை மேலும் சில வாக்குச்சாவடிகளில் ஏற்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

3 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு 50 நிமிடம் தாமதமாக தொடங்கியதாக டெல்லி உள்துறை மந்திரி சத்யேந்தர் ஜெயின் கூறினார்.

முன்னாள் முதல்-மந்திரி ஷீலா தீட்சித் ஓட்டுப்பதிவு செய்ய வந்தபோது அவரது காரை மட்டும் வாக்குச்சாவடி வரையில் அதிகாரிகள் அனுமதித்ததால் பிற வாக்காளர்கள் பொங்கியெழுந்தனர். மற்றொரு மூத்த வாக்காளரின் காரையும் அவ்வாறு அனுமதிக்க வேண்டும் என்று வாக்காளர்கள் குரல் கொடுத்ததால் அவருக்கும் அதிகாரிகள் அனுமதி அளித்தனர்.

நாட்டின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது. இவற்றில் 13 தொகுதிகளில் கடந்த தேர்தலில் பாரதீய ஜனதா வென்றிருந்தது. அசம்காரில் மட்டும் சமாஜ்வாடி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் வெற்றி பெற்றிருந்தார்.

நேற்றைய தேர்தலில் 14 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாகத்தான் தொடங்கியது. 2 மணி நேரத்தில் 9.28 சதவீத வாக்குகள்தான் பதிவாகி இருந்தது. பின்னர் சற்று விறுவிறுப்பானது.

மத்திய பிரதேசத்தில் 8 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. ஆரம்பத்தில் மந்தமாக தொடங்கிய வாக்குப் பதிவு பின்னர் சூடு பிடித்தது. போபால் நகரில் பாரதீய ஜனதா வேட்பாளரும், பெண் சாமியாருமான பிரக்யா சிங் தாக்குர் காலை 7.30 மணிக்கு ஓட்டுப்பதிவு செய்தார். காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, குவாலியரில் தனது வாக்குரிமையை செலுத்தினார்.

இந்த மாநிலத்தில் வாக்குப்பதிவுக்கு முன் நடந்த மாதிரி வாக்குப்பதிவில் கோளாறு இருப்பதாக தெரிய வந்து சுமார் 40 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மாற்றப்பட்டதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி காந்தாராவ் தெரிவித்தார்.

அரியானா மாநிலத்தில் மொத்தம் உள்ள 10 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் கர்னாலில் காலையிலேயே வந்து வாக்குப்பதிவு செய்தார்.

மேற்கு வங்காள மாநிலத்தில் 8 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. இந்த தொகுதிகள் அனைத்தும் கடந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றவை. இந்த முறை அந்தக் கட்சிக்கும், பாரதீய ஜனதா கட்சிக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது.

நேற்றைய வாக்குப்பதிவின்போது இவ்விரு கட்சி தொண்டர்கள் இடையே பல இடங்களில் மோதல்கள், வன்முறை சம்பவங்கள் அரங்கேறினாலும் வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு திரண்டு வந்து தங்கள் ஓட்டுரிமையை செலுத்தியது ஜனநாயகத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை காட்டுவதாக அமைந்தது.

அங்குள்ள கட்டால் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரும், ஓய்வு பெற்ற பெண் ஐ.பி.எஸ். அதிகாரியுமான பாரதி கோஷ் அடுத்தடுத்து 2 முறை தாக்கப்பட்டார். அவர் கேஷ்பூர் என்ற இடத்தில் வாக்குச்சாவடியில் நுழைய முயன்றபோது தாக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

அவரது வாகனத்துடன் வந்த பிற வாகனங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டதாகவும், கல்வீசி தாக்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. அவரது பாதுகாவலர் ஒருவர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புருலியா தொகுதியில், பலராம்பூர் என்ற இடத்தில் வாக்குச்சாவடி கைப்பற்றப்பட்டதாக கூறி திரிணாமுல் காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சி தொண்டர்கள் இடையே மோதல்கள் ஏற்பட்டன. மோதலில் ஈடுபட்டவர்களை மத்திய படையினர் தடியடி நடத்தி கலைத்தனர்.

பீகார் மாநிலத்தில் 8 தொகுதிகளிலும் மந்தமாகவே வாக்குப்பதிவு தொடங்கியது. சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதன் காரணமாக அங்கெல்லாம் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது.

வால்மீகி நகர், வைஷாலி தொகுதிகளில் குறிப்பிட்ட இடங்களில் பாதுகாப்பு காரணங்களையொட்டி வாக்குப்பதிவு 4 மணிக்கு முடிந்தது. பிற இடங்களில் 6 மணிக்கு முடிந்தது. மற்றபடி விரும்பத்தகாத சம்பவங்கள் ஏதும் இல்லை.

ஜார்கண்ட் மாநிலத்தில் 4 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. அவற்றில் வாக்காளர்கள் காலை 7 மணி முதல் ஆர்வமுடன் வந்து வாக்களித்ததையும், வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்ததையும் காண முடிந்தது.

முதல்-மந்திரி ரகுபர் தாஸ் குடும்பத்துடன் வந்து ஜாம்ஷெட்பூரில் ஓட்டு போட்டார்.

இங்கு விரும்பத்தகாத சம்பவங்கள் எதுவும் நடந்ததாக தகவல் இல்லை.

பொதுவாக நேற்றைய தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாகவும், அமைதியாகவும் நடந்து முடிந்தது.

7-ம் கட்ட தேர்தல் (இறுதி கட்ட தேர்தல்) 19-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் 8 மாநிலங்களை சேர்ந்த 59 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலில்தான் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுகிற உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் வாக்குப்பதிவு நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

7-ம் கட்ட தேர்தலின்போது தமிழ்நாட்டில் சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கிறது.

ஓட்டு எண்ணிக்கை 23-ந் தேதி நடைபெறுகிறது.


Next Story