மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் ஓட்டு போடவில்லை - புதிய சர்ச்சை


மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் ஓட்டு போடவில்லை - புதிய சர்ச்சை
x
தினத்தந்தி 13 May 2019 4:45 AM IST (Updated: 13 May 2019 3:52 AM IST)
t-max-icont-min-icon

மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் ஓட்டு போடாதது, புதிய சர்ச்சைக்கு வழி வகுத்துள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்துக்கு நேற்று நடந்த 6-ம் கட்ட தேர்தலில் குறிப்பிடத்தகுந்த ஒரு தகவல் தொகுப்பு இது:-

* மத்திய பிரதேச மாநிலம், போபால் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், வழக்கமாக தனது சொந்த தொகுதியான ராஜ்காரில் ஓட்டு போடுவது வழக்கம். போபாலில் நேற்று அவர் வாக்குப்பதிவை பார்வையிட வேண்டி இருந்ததால், அங்கிருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள ராஜ்காருக்கு ஓட்டு போட போகவில்லை. இதை அவரே ஒப்புக்கொண்டு, வருத்தம் தெரிவித்தார். அவர் ஓட்டு போடாதது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

* துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மனைவி உஷாவுடன் வந்து டெல்லி நிர்மாண் பவனில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் ஓட்டுப்பதிவு செய்தார்.

* உத்தரபிரதேச மாநிலம், சுல்தான்பூர் தொகுதியில் போட்டியிடும் மத்திய மந்திரி மேனகா காந்திக்கும், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கூட்டணி வேட்பாளர் சோனு சிங்குக்கும் இடையே ஒரு வாக்குச்சாவடியில் வைத்து நேரடி மோதல் ஏற்பட்டது. இருவரும் கைகளை நீட்டி பேசினர். சோனுசிங்கிடம் மேனகா காந்தி, “உங்கள் ஆதரவாளர்கள் வாக்காளர்களை மிரட்டுகின்றனர். இதெல்லாம் வேலைக்கு ஆகாது” என குறிப்பிட்டார். ஆனால் சோனு சிங் அதை மறுத்தார். அப்போது அவருடைய ஆதரவாளர்கள் கோஷங்களை முழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இரு வேட்பாளர்களும் அங்கிருந்து கலைந்து சென்று விட்டனர்.

* ஜார்கண்ட் மாநிலத்தில் கிரிதிஹ் நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா கூட்டணி வேட்பாளர் சந்திரபிரகாஷ் சவுத்ரியின் வாகனத்தை விஷமிகள் தாக்கி சேதப்படுத்தி விட்டனர். அனைத்து ஜார்கண்ட் மாணவர் யூனியன் தலைவர் லம்போடர் மஹ்டோவின் வாகனமும் சேதப்படுத்தப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவியது.

* டெல்லி திலக் விஹாரில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் 111 வயதான பச்சான் சிங் என்ற வாக்காளர், சக்கர நாற்காலியில் வந்து வாக்குப்பதிவு செய்து, தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றியது பிற வாக்காளர்களுக்கு உத்வேகம் அளிக்கக் கூடியதாக அமைந்தது. என்ன வேடிக்கை என்றால் ஆம் ஆத்மி என்றொரு கட்சி இருப்பதோ, டெல்லி முதல்-மந்திரி அந்தக் கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் என்பதோ இவருக்கு தெரியவில்லை.

இவரைப் பொறுத்தமட்டில் காங்கிரஸ், பாரதீய ஜனதாவுக்கும் இடையேதான் போட்டி நடப்பதாக கருதுகிறார். இது அவரது இளைய மகன் ஜஸ்பீர் (63) வெளியிட்ட தகவல்.

* ஜார்கண்ட் மாநிலத்தில் சிங்பும் தொகுதியில் 106 வயதான புபலதாபால் என்ற பெண் ஓட்டு போட்டார். இவர் முதல் பொதுத் தேர்தலில் இருந்து ஓட்டு போட்டு வருவதாக தெரிவித்தார்.


Next Story