மத்திய படையினர் என்ற போர்வையில் பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு


மத்திய படையினர் என்ற போர்வையில் பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 12 May 2019 8:46 PM IST (Updated: 12 May 2019 8:46 PM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காளத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டு வரும் மத்திய பாதுகாப்பு படையினர் மக்களை பா.ஜனதாவிற்கு வாக்களிக்க கேட்டு வருகிறார்கள் என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.


மேற்கு வங்காளத்தில் தேர்தல் தொடங்கியதில் இருந்து பா.ஜனதா - திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே கடுமையான மோதல் போக்கு நடக்கிறது. இதில் படுகொலைகளும் அரங்கேறியுள்ளது. மறுபுறம் பிரதமர் மோடியும், மம்தா பானர்ஜியும் காரசாரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். மேற்கு வங்காளத்தில் வாக்குப்பதிவின் போது பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய பாதுகாப்பு படையினர் ஒரு வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் காயமடைந்தார்.

இந்த சம்பவம் மற்றும் மாநிலத்தில் மத்திய படையினரின் தேர்தல் பணிகள் குறித்தும் முதல்–மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார். தெற்கு 24 பர்கானஸ் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டு மம்தா பானர்ஜி பேசுகையில், இன்று வாக்குச்சாவடி ஒன்றில் மத்திய படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சிறுபான்மை இனத்தை சேர்ந்த எனது சகோதரர்களில் ஒருவர் காயமடைந்ததாக அறிந்தேன். மத்திய பாதுகாப்பு படையினரை நான் அவமதிக்கவில்லை.

ஆனால் தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக செயல்பட அவர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மத்திய படையினர் என்ற போர்வையில் பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களை பா.ஜனதாவினர் வலுக்கட்டாயமாக மேற்கு வங்காளத்துக்குள் அனுப்பி உள்ளனர். மத்திய படையினரின் சீருடையில் சில ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களை மாநிலத்துக்குள் அனுப்பியிருக்கலாம் என நான் சந்தேகப்படுகிறேன்.

 ஏனெனில் வாக்குச்சாவடிகளில் ஓட்டு போடுவதற்காக வரிசையில் காத்திருந்தவர்களிடம், பா.ஜனதாவுக்கு ஒட்டு போடுமாறு மத்திய படையினர் அறிவுறுத்தி உள்ளனர். இதை எப்படி அவர்கள் செய்ய முடியும்? பா.ஜனதாவுக்கு ஓட்டுப்போடுமாறு வாக்காளர்களை அறிவுறுத்துவதுதான் அவர்களது வேலையா? இங்கு தேர்தலை நடத்துவதற்கு சில ஓய்வு பெற்ற அதிகாரிகளை மோடி அரசு நியமித்து உள்ளது. அவர்கள் தங்களுக்கு தோன்றுவதை எல்லாம் செய்து வருகின்றனர் என்றார்.

மேலும் பேசுகையில்,  மோடிக்கு ஓட்டு போடுமாறு மக்களை வலியுறுத்துவதற்காக நீங்கள் வெட்கப்பட வேண்டும். நீங்கள் ஒரு பணிக்காக இங்கு வந்திருக்கிறீர்கள். இன்று மோடியின் கீழ் இருக்கும் நீங்கள், நாளை வேறு ஒருவரின் கீழ் பணியாற்ற நேரிடும். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார். 

Next Story