மோடியின் ஆட்சியில் விவசாயிகள் வருமானம் பாதியாக குறைந்து விட்டது -பிரியங்கா குற்றச்சாட்டு


மோடியின் ஆட்சியில் விவசாயிகள் வருமானம் பாதியாக குறைந்து விட்டது  -பிரியங்கா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 9 May 2019 9:32 PM IST (Updated: 9 May 2019 9:32 PM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடியின் தலைமையிலான பா.ஜனதா ஆட்சியில் விவசாயிகள் வருமானம் பாதியாக குறைந்து விட்டதாக பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என பா.ஜனதா பிரசாரம் செய்து வருகிறது. விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தையும் பா.ஜனதா அரசு முன்னெடுத்து வருகிறது. இதற்கிடையே காங்கிரஸ் நாங்கள் ஆட்சிக்குவந்தால் விவசாயக் கடனை தள்ளுபடி செய்வோம், விளைப்பொருட்களுக்கு நியாமான விலையை உறுதிசெய்வோம் எனக் கூறிவருகிறது. இந்நிலையில் விவசாயிகள் வருமானம் விவகாரத்தில் பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி விமர்சனம் செய்துள்ளார். 

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். உத்தரபிரதேசத்தின் பிரதாப்கரில் பிரசாரம் செய்த பிரியங்கா காந்தி, மோடி அரசு மக்களுக்கு எதையும் செய்யவில்லை. ஆனால் பெரிய சாதனைகளை புரிந்தது போல தேர்தல் பிரசாரங்களில் அவர்கள் பேசி வருகின்றனர். ஆனால் மக்கள் மீது குறிப்பாக விவசாயிகள், இளைஞர்களுக்கு அவர்கள் பெரிதாக எதையும் செய்யவில்லை.

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என பா.ஜனதா அரசு கூறி வருகிறது. ஆனால் கடந்த 5 ஆண்டுகால மோடி அரசின் விவசாய விரோத கொள்கைகளால் விவசாயிகளின் வருமானம் பாதியாக குறைந்துள்ளது. இதைப்போலவே வேலைவாய்ப்புகளும் குறைந்து விட்டன.  ஆண்டுக்கு 2 கோடி புதிய வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என அவர்கள் வாக்குறுதி அளித்து இருந்தனர். ஆனால் இந்த ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் 1 கோடி வேலைகள் பறிபோனதுதான் மிச்சம். விவசாயிகள், இளைஞர்களை முற்றிலும் புறக்கணித்த சுயநலமிக்க அரசுதான் மோடி ஆட்சி என காட்டமாக பேசினார். 

Next Story