மோடியை அறைவதாக சொன்னேனா? -மம்தா பானர்ஜி விளக்கம்
மோடியை கன்னத்தில் அறைவேன் என்று மம்தா பானர்ஜி சொன்னதாக பிரதமர் மோடி கூறியதை மம்தா பானர்ஜி மறுத்துள்ளார்.
மேற்கு வங்காள தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் மம்தா பானர்ஜி இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. திரிணாமுல் காங்கிரசை கொள்ளைக்கூட்டம் என பிரதமர் மோடி விமர்சனம் செய்ததை மம்தா பானர்ஜி எதிர்த்தார். செவ்வாய் கிழமை கூட்டம் ஒன்றில் பேசுகையில், “ஒவ்வொரு முறையும் மோடி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை கொள்ளைக்கூட்டம் என விமர்சனம் செய்யும் போது எல்லாம் அவருக்கு ஜனநாயகரீதியான அறையை கொடுக்க வேண்டும் போலிருக்கும்,” என பேசியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மம்தா பானர்ஜி எல்லை மீறுகிறார் என கண்டனம் தெரிவித்தார்.
பிரதமர் மோடி இதைவைத்து பிரசாரம் செய்கையில், மம்தா பானர்ஜி என்னை அறைந்தாலும் அவருடைய ஆசிர்வாதமாக மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வேன் என குறிப்பிட்டார். இதுதொடர்பான விமர்சனம் எல்லை தாண்டிய நிலையில் மம்தா விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார். மொழி தெரியவில்லை என்றால் நீங்களாவே ஒரு பொருளை வைத்துக்கொள்ளாதீர்கள் எனக் கூறியுள்ளார்.
புருலியா மாவட்டம் சிமுலியாவில் பிரசார கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசுகையில், மோடியை கன்னத்தில் அறைவேன் என்று நான் பேசியதாக மோடி கூறியுள்ளார். அது, ஜனநாயக அறை. மொழியை புரிந்து கொள்ளுங்கள். நான் ஏன் உங்களை அறையப்போகிறேன். நான் அப்படிப்பட்ட ஆள் அல்ல. ஜனநாயக அறை என்றால், மக்கள் தங்கள் ஓட்டு மூலமாக தீர்ப்பு அளிப்பார்கள் என்று அர்த்தம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Related Tags :
Next Story