எங்கள் கட்சியினர் கடத்தல்காரர்கள் என நிரூபிக்க தவறினால் பிரதமர் மோடி 100 தோப்புகரணம் போட வேண்டும்; மம்தா பானர்ஜி
எங்கள் கட்சி வேட்பாளர்கள் நிலக்கரி கடத்தல்காரர்கள் என நிரூபிக்க தவறினால் பிரதமர் மோடி காதுகளை பிடித்து கொண்டு 100 தோப்புகரணம் போட வேண்டும் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார். #PMModi
பங்குரா,
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் நிலக்கரி கடத்தல்காரர்களாக உள்ளனர். நிலக்கரி சுரங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஊதியம் கிடைக்கவில்லை. ஆனால் அக்கட்சி தலைவர்கள் சட்டவிரோத முறையில் திறந்தவெளி சுரங்கங்கள் நடத்தி வருவாய் ஈட்டுகின்றனர் என பிரதமர் மோடி பங்குரா நகரில் பேரணி ஒன்றில் குற்றச்சாட்டாக கூறினார்.
நாட்டின் 135 கோடி மக்களின் ஆதரவு எனக்கு உள்ளது என்பதற்காக, என்மேல் பானர்ஜி கோபப்படுவதற்காக நான் கவலைப்படவில்லை. எனினும், மேற்கு வங்காள மக்களுக்காக அவர் அச்சப்பட வேண்டும். சிட்பண்டு ஊழல் மற்றும் மாநிலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல் ஆகியவற்றால் மக்கள் அவர் மீது கோபத்திலும், வருத்தத்திலும் உள்ளனர் என பேசினார்.
இதன்பின் மேற்கு வங்காளத்தின் பங்குரா நகரில் இன்று நடந்த தேர்தல் பேரணி ஒன்றில் கலந்து கொண்டு முதல் மந்திரி மம்தா பானர்ஜி ஆவேசமுடன் பேசும்பொழுது, இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளனர் என ஒரு வேட்பாளர் கண்டுபிடிக்கப்பட்டால் கூட அனைத்து 42 மக்களவை தொகுதிகளில் இருந்தும் எனது கட்சி வேட்பாளர்களை திரும்ப பெற்று விடுவேன்.
நீங்கள் கூறியது பொய் என்றால், உங்களது காதுகளை பிடித்து கொண்டு நீங்கள் 100 தோப்புகரணம் போட வேண்டும் என கூறினார்.
அவர் தொடர்ந்து, சுரங்க நடவடிக்கைகளை மத்திய அரசின் கீழ் உள்ள நிலக்கரி அமைச்சகம் கட்டுப்படுத்துகிறது. சுரங்கங்களை மத்திய தொழிற்பாதுகாப்பு படை காவல் காத்து வருகிறது. சட்டவிரோத நிலக்கரி தொழிலில் பா.ஜ.க.வினரே ஈடுபட்டு வருகின்றனர் என மோடிக்கு அவர் பதிலடியாக தெரிவித்து உள்ளார்.
நான் ஒரு பென் டிரைவ் போன்றவள். கால்நடை கடத்தல் மற்றும் நிலக்கரி மாபியா பற்றிய பல ரகசிய தகவல்கள் என்னிடம் உள்ளன. கால்நடை கடத்தலில் ஈடுபடும் மத்திய மந்திரி ஒருவர் மற்றும் பா.ஜ.க. எம்.பி. ஒருவர் ஆகியோரின் தகவல்கள் இந்த பென் டிரைவில் உள்ளது. சிட்பண்டு ஊழல்களில் எங்கள் கட்சியினரின் தொடர்பு பற்றிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story