9வது மக்களவை தேர்தல்; வி.பி. சிங் பிரதமரானார்


9வது மக்களவை தேர்தல்; வி.பி. சிங் பிரதமரானார்
x
தினத்தந்தி 8 May 2019 10:18 PM IST (Updated: 8 May 2019 10:18 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் நடந்த 9வது மக்களவை தேர்தலில் வி.பி. சிங் பிரதமரானார்.

இந்தியாவில் கடந்த 1989ம் ஆண்டு 9வது மக்களவை தேர்தல் நடந்தது.  இந்த தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 197 தொகுதிகளையும், ஜனதா தள கட்சி 143 தொகுதிகளையும், பா.ஜ.க. 85 தொகுதிகளையும் பிடித்தன.

தெலுங்கு தேசம், தி.மு.க. மற்றும் அசாம் கனபரிஷத் போன்ற மாநில கட்சிகள் ஒன்றிணைந்து வி.பி. சிங் தலைமையில் தேசிய முன்னணி என்ற கூட்டணி அமைந்தது.  இந்த கூட்டணியின் தலைவராக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரான என்.டி. ராமராவும், ஒருங்கிணைப்பாளராக ராஜ்புத் முக்கிய பிரமுகரான வி.பி. சிங்கும் செயல்பட்டனர்.

இக்கூட்டணிக்கு பா.ஜ.க. மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்தன.  இதனால் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது.  இந்த தேர்தலில், போபர்ஸ் ஊழல், பஞ்சாப்பில் அதிகரித்து வந்த பயங்கரவாதம், விடுதலை புலிகள் மற்றும் இலங்கை அரசுக்கு இடையேயான உள்நாட்டு போர் போன்ற சில விவகாரங்கள் ராஜீவ் காந்தி அரசுக்கு எதிராக எழுந்தன.

அவரது அரசில் நிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்த வி.பி. சிங், அரசை விமர்சித்து வந்துள்ளார்.  இதன்பின் அமைச்சரவையில் இருந்து சிங் நீக்கப்பட்டார்.  இதனை அடுத்து காங்கிரஸ் கட்சி மற்றும் மக்களவை உறுப்பினர் பதவிகளை சிங் ராஜினாமா செய்தார்.

அருண் நேரு மற்றும் ஆரிப் முகமது கான் ஆகியோருடன் இணைந்து ஜனமோர்ச்சா என்ற கட்சியை தொடங்கி மீண்டும் அரசியலில் நுழைந்து அலகாபாத் தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினரானார்.  தேசிய அளவில் அவரது வளர்ச்சியை கண்ட ராஜீவ், அவரை கட்டுப்படுத்த மற்றொரு ராஜ்புத் முக்கிய பிரமுகரான சத்யேந்திர நரைன் சிங் என்பவரை கொண்டு வந்தார்.  ஆனால் அது தோல்வியிலேயே முடிந்தது.

ஜனதாதள கட்சி தலைவராக இருந்த வி.பி. சிங், இதன்பின்னர் 1989ம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் தேசிய கூட்டணி அரசின் தலைவரானார்.  இந்நிலையில், கடந்த 1990ம் ஆண்டு அக்டோபர் 23ந்தேதி அயோத்தியா நகரில் உள்ள பாபர் மசூதி நோக்கி பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி ரதயாத்திரை மேற்கொண்டார்.  அவரை, பீகார் முதல் மந்திரியாக இருந்த லாலு பிரசாத் யாதவின் அரசுடன் இணைந்து சிங்கின் அரசு கைது செய்தது.  அதனுடன் அத்வானியின் ரதயாத்திரையும் நிறுத்தப்பட்டது.

இதனால், சிங்கின் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பா.ஜ.க. திரும்ப பெற்று கொண்டது.  இதன் விளைவாக கடந்த 1990ம் ஆண்டு நவம்பர் 7ந்தேதி நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அவரது அரசு தோல்வி அடைந்தது.

ஜனதா தள கட்சியில் இருந்து 64 எம்.பி.க்களுடன் சந்திரசேகர் பிரிந்து சென்று அதே ஆண்டில் சமாஜ்வாடி ஜனதா கட்சியை தொடங்கினார்.  அவருக்கு காங்கிரஸ் கட்சி வெளியில் இருந்து ஆதரவளித்தது.  இதனால் அவர் இந்தியாவின் 9வது பிரதமரானார்.  ஆனால் ராஜீவ் காந்தியை அவரது அரசு உளவு பார்க்கிறது என கூறியநிலையில், சந்திரசேகர் கடந்த 1991ம் ஆண்டு மார்ச் 6ந்தேதி பதவி விலகினார்.

Next Story